தன்னைப் பற்றி தவறான தகவலை செய்தியாக வெளியிட்ட செய்தியாளர் குறித்து பிரபல கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் மிகவும் கடுமையான முறையில் தனது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளார். 


”ஐபிஎல் அரங்கில் மட்டுமில்லாது உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் முக்கியமான மற்றும் அபாயகரமான பந்து வீச்சாளர்களில் ஒருவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஜோஃப்ரா ஆர்ச்சர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே முழங்கை பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரால் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவும் முடியவில்லை. தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவும் இல்லை. இந்த ஆண்டில் அவர் விளையாடிய முதல் போட்டி என்றால் அது மும்பை அணிக்காக, பெங்களூருவை எதிர்த்து தான். ஆனால் அவரால், முன்பு போல் வேகமாக பந்தை வீச முடியவில்லை. இது அணியின் வெற்றியை பாதித்தது. ஏற்கனவே மும்பை அணி பும்ரா இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், ஆர்ச்சராலும் சரியாக பந்து வீச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது முழங்கை பிரச்சனை இன்னும் முழுமையாக குணமடையாததால், ஆர்ச்சர் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய பெல்ஜியம் செல்கிறார்” என்ற செய்தியை பிரபல விளையாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. 




இதனைப் பின்பற்றி பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிடத் தொடங்கின. இதுகுறித்து அறிந்த ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”ஒன்றைப் பற்றி எதுவும் தெரியாமல் எப்படி ஒரு கட்டுரை தயார் செய்து வெளியிடுகிறார்கள்? இது முழுக்க முழுக்க பைத்தியக்காரத்தனம். என்னைப் பற்றி தவறான செய்தியை வெளியிட்டவர்கள் உண்மையில் வெட்கப்பட வேண்டும், ஒருவர் ஏற்கனவே ஒரு பிரச்சனையில் இருந்து மீண்டு கொண்டு இருக்கும் போது தனது சொந்த ஆதாயத்துக்காக இவ்வாறு செய்தி வெளியிடுகிறீர்கள். உண்மையில் உங்களைப் போன்றவர்கள் தான் பிரச்சனையே” இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் தன்னைப் பற்றி தவறான செய்தியை வெளியிட்டவர்கள் மீது தனது கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளார். 


இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை 2 போட்டிகளில் மட்டும் களமிறங்கியுள்ள ஜோஃப்ரா 8 ஓவர்கள் பந்து வீசி, 75 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மேலும், நம்பிக்கையான பந்து வீச்சாளரான இவர் அதிக ரன்களை வாரிக்கொடுத்து இருப்பது மிகவும் கவலைக்குரிய விசயமாக உள்ளது. மும்பை அணியின் பந்து வீச்சின் பலமே, பும்ரா மற்றும் ஆர்ச்சர்தான். ஆனால் பும்ரா விளையாடாத நிலையில், அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் ஆர்ச்சர் மீதான எதிர்பார்ப்பு அவருக்கு அழுத்தத்தினை அளிக்கலாம்.