ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்த மைதானத்தில் சேஸ் செய்த அணி பெரும்பாலும் போட்டியை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரம், பெங்களூரு அணியோ தனது முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றாலும், அதற்கடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டது. இதனால், வெறும் இரண்டு புள்ளிகள் உடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இதனால் டெல்லி அணி தனது வெற்றிக்கணக்கை தொடங்கவும், பெங்களூரு அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பவும் திட்டங்களை வகுத்து களமிறங்கியுள்ளன. 


 



அணிகளின் நிலவரம்:


டூப்ளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பெங்களூரு அணிக்காக சிறப்பாக செயல்பட்டாலும், பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவது பெங்களூரு அணியின் பெரிய பலவீனமாக உள்ளது. டெல்லி அணியை பொருத்தவரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எதிலுமே, நடப்பு தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. கேப்டன் வார்னர் மற்றும் துணை கேப்டன் அக்சர் படேல் மட்டுமே அணியை வெற்றி பெறச்செய்ய தொடர்ந்து போராடி வருகின்றனர்.


மைதானம் எப்படி?


பெங்களூரு மைதானம் எப்போது பேட்டிங்கிற்கு சாதகமானது தான். முதல் பந்து முதலே பேட்ஸ்மேன்கள் அடித்து விளையாடலாம் என்பதால்,  முதலில் பேட்டிங் செய்யும் அணி 230 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி வாய்ப்பினை பெற முடியும். 


சிறந்த பேட்ஸ்மேன்:


இன்றைய போட்டியில் கவனம் ஈர்கக்கூடிய பேட்ஸ்மேன் ஆக பெங்களூரு கேப்டன் டூப்ளெசிஸ் இருப்பார் என கருதமுடிகிறது. 38 வயதான அவர் நடப்பு தொடரில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 175 ரன்களை சேர்த்துள்ளார். பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடும் மிடில் ஓவர்களில் கூட, டூப்ளெசியால்  வேகமாக ரன் சேர்க்க முடியும் என்பது பெங்களூரு அணிக்கு பெரும் சாதகமாக உள்ளது. அதேபோல், விராட் கோலி இரண்டு அரைசதங்கள் விளாசி சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். 


சிறந்து பந்துவீச்சாளர்:


இன்றைய போட்டியில் கவனம் ஈர்கக்கூடிய பந்துவீச்சாளராக டெல்லி அணியை சேர்ந்த ஆண்ரிச் நோர்ட்ஜே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடப்பு தொடரில் 3 போட்டிகளில் விளையாடி அவர் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சின்னசாமி மைதானத்தில் வழக்கமாக வேகப்பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினாலும், நோர்ட்ஜேவால் அங்கு அதிக வேகம் மற்றும் பவுன்சருடன் பந்துவீச முடியும் என்பது அவரது பலமாக கருத முடிகிறது.