மூன்று நாள்கள் நடைபெற்ற ஏலத்திற்குப் பிறகு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமம் சுமார் 48,390 கோடி ரூபாய் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமத்தை டிஸ்னி ஸ்டார் நிறுவனமும், டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பும் உரிமத்தை வியாகாம் 18 -  ரிலையன்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. உலகின் இரண்டாவது சிறந்த லீக் போட்டியாக ஐபிஎல் மாறியிருப்பதோடு, ஏலத்தின் மூலமாக பிசிசிஐ அமைப்பு ஜாக்பாட் அடித்திருப்பதால் அதனைப் பாராட்டி அமுல் நிறுவனம் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. 


பிசிசிஐ ஈட்டியுள்ள லாபத்தைக் குறிக்கும் வகையில், கிரிக்கெட் ஜெர்சி அணிந்திருக்கும் அமுல் குழந்தை `நம்பமுடியாத லாபம் தந்த லீக்’ என ஐபிஎல் போட்டிகளைப் பாராட்டும் வகையில் இந்தக் கார்ட்டூன் உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா, வியாகாம் 18, டைம்ஸ் இண்டெர்நெட் ஆகியோரைப் பாராட்டியும், நன்றி தெரிவித்தும் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. 






ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொண்ட பிசிசிஐ அதிகாரிகளைப் பாராட்டி பதிவிட்டுள்ளார் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி. முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தன் பதிவில், `ஐபிஎல் போட்டிகளைத் தொடக்கம் முதல் இப்போதைய அளவு வரை அதனை வளர்க்க உங்கள் கடும் உழைப்பை நேரில் கண்டுள்ளேன்.. அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சியில் காணும் 40 கோடி மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள் என்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். 







அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த உரிமம் பெற்றிருக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் தலா 118.02 கோடி ரூபாய் தொகையை பிசிசிஐ அமைப்புக்குச் செலுத்த வேண்டும். பேக்கேஜ் `ஏ’ என்று அழைக்கப்படும் இந்தியாவுக்குள் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்திற்கு 23,575 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பேக்கேஜ் `பி’ என்று அழைக்கப்படும் இந்தியாவுக்குள் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், பேக்கேஜ் `சி’ என்று அழைக்கப்படும் ஒவ்வொரு சீசனுக்கும் 18 சிறப்புப் போட்டிகள் ஆகியவற்றை வியாகாம் 18, ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் தொலைக்காட்சி, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் ரிலையன்ஸ், டைம்ஸ் ஆகிய நிறுவனங்களால் பெறப்பட்டுள்ளது.