ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஜெய்ப்பூர் நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியின் முடிவு புள்ளிப்பட்டியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை அணி சட்டென்று சரிந்து புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு சென்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி சட்டென்று 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது.
புள்ளிப்பட்டியல்:
புள்ளிப்பட்டியலின் முழு விவரத்தை கீழே காணலாம்.
- ராஜஸ்தான் - 5 வெற்றி 3 தோல்வி - 10 புள்ளிகள்
- குஜராத் - 5 வெற்றி 2 தோல்வி - 10 புள்ளிகள்
- சென்னை - 5 வெற்றி 3 தோல்வி - 10 புள்ளிகள்
- லக்னோ - 4 வெற்றி 3 தோல்வி - 8 புள்ளிகள்
- பெங்களூர் - 4 வெற்றி 4 தோல்வி - 8 புள்ளிகள்
- பஞ்சாப் - 4 வெற்றி 3 தோல்வி - 8 புள்ளிகள்
- கொல்கத்தா - 3 வெற்றி 5 தோல்வி - 6 புள்ளிகள்
- மும்பை - 3 வெற்றி 4 தோல்வி - 6 புள்ளிகள்
- சன்ரைசர்ஸ் - 2 வெற்றி 5 தோல்வி - 4 புள்ளிகள்
- டெல்லி - 2 வெற்றி 5 தோல்வி - 4 புள்ளிகள்
சென்னை சரிவு:
இந்த புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடத்தில் உள்ள ராஜஸ்தான், குஜராத், சென்னை அணிகள் 10 புள்ளிகள் என்று ஒரே அளவிலான புள்ளிகளை பெற்றிருந்தாலும், ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி முதலிடத்தை பிடித்துள்ளது. ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால், துருவ்ஜோயல் அதிரடியில் 202 ரன்களை எடுத்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி 170 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் தகுதி உள்ளது. தற்போது வரை ராஜஸ்தான், குஜராத், சென்னை அணிகள் தங்கள் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளனர். ஆனாலும், தொடர்ந்து வெற்றியை தக்கவைத்தால் மட்டுமே தங்களது வாய்ப்பை உறுதி செய்ய முடியும். அதேசமயம் லீக் போட்டிகள் இன்னும் இருப்பதால் புள்ளிப்பட்டியலில் கீழே இருக்கும் அணிகள் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் உள்ளது.
வெற்றிக்காக போராட்டம்:
அவர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேற முயற்சிப்பார்கள் என்பதால் அடுத்தடுத்து வரும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதலாம். முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா, மும்பை, சன்ரைசர்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து வருவது அந்த அணிகளுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. குறிப்பாக, அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி தொடர் தோல்விகளுக்கு பிறகு மீண்டெழுந்த நிலையில் மீண்டும் பந்துவீச்சில் சொதப்பி தோல்வியை சந்தித்து வருவது மும்பை ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது.