ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரரான ஷர்துல் தாகூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் வித்தியாசமான சாதனைப் படைத்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்தும் பரிமாற்றம்
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இதுவரை 18 சீசன்கள் நடைபெற்றுள்ளது. 2026 ஆம் ஆண்டு 19வது சீசன் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்பு மினி ஏலம் நடைபெறும். அதேசமயம் இவற்றிற்கு முன்பாக மினி ட்ரேட் எனப்படும் வீரர்கள் பரிமாற்றம் நடைமுறை கையாளப்படும். இதில் பணம் கொடுத்து வீரர்களை வாங்குவது மற்றும் வீரர்கள் மட்டுமே பரிமாற்றம் செய்வது என இரு வழிகள் கையாளப்படும்.
இப்படியான நிலையில் ராஜஸ்தான் அணி வீரர் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேட்டுள்ள நிலையில், அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, சாம் கரன் போன்ற வீரர்களை ராஜஸ்தான் அணி நிர்வாகம் கோரியதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஷர்துல் தாகூர் அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
படைக்கப்பட்ட வித்யாசமான சாதனை
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடிய ஷர்துல் தாகூரை மும்பை இந்தியன்ஸ் அணி பணத்தைக் கொடுத்து பெற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் மூன்று முறை ட்ரேட் செய்யப்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியிடமிருந்து ஷர்துல் தாகூரை வாங்கியது. 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு அவர் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு மாற்றப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த இரண்டு வர்த்தகங்களும் முற்றிலும் பணம் மூலமாக மட்டுமே செய்யப்பட்டன. அதேசமயம் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஷர்துல் தாகூர் யாராலும் அணியில் எடுக்கப்படவில்லை. இதனால் அவர் கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாட எசெக்ஸ் அணியுடனும் ஒப்பந்தம் செய்திருந்தார்.
இதற்கிடையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரரான மொஹ்சின் கான் காயமடைந்து ஐபிஎல்லில் இருந்து வெளியேறினார், இதனால் ஷர்துலை லக்னோ அணி நிர்வாகம் மாற்றாக ஒப்பந்தம் செய்தது. அந்த சீசனில் முதல் இரண்டு போட்டிகளையும் சேர்த்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் மீதமுள்ள சீசன் முழுவதும் போராடி 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப், புனே, சென்னை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ, தற்போது மும்பை என 7 அணிகளில் அவர் விளையாடிய சாதனைக்கு சொந்தக்காரராகி உள்ளார். ஒட்டுமொத்தமாக 105 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 107 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஷர்துல் தாகூர் ரூ.2 கோடி கொடுத்து பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.