இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 15வது சீசன் இறுதிபோட்டி (நேற்று) ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடந்த இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தாங்கள் பங்கேற்ற முதல் சீசனிலேயே குஜராத் அணி பட்டம் பெற்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 


2022 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராஜஸ்தான் ராயல்ஸ் தோல்வியடைந்த நிலையில், அதன் நட்சத்திர வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணியில் ஆடி  ஆரஞ்சு தொப்பி மற்றும் ஊதா நிற தொப்பியை வென்ற மூன்றாவது ஜோடி என்ற பெருமையை பெற்றுள்ளது. 


ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன் குவித்தவர் மற்றும் அதிக விக்கெட் எடுத்தவர் ஒரே அணியில் இருப்பது இது மூன்றாவது முறையாகும்.


இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் 17 போட்டிகளில் விளையாடி 863 ரன்கள் எடுத்தார். 616 ரன்களுடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் இரண்டாவது இடத்தில் உள்ளார். அதேபோல், யுஸ்வேந்திர சாஹல் 17 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இந்தநிலையில், ஒரே அணியிலிருந்து ஆரஞ்சு மற்றும் ஊதா கேப் வென்றவர்கள் பட்டியலை கீழே காணலாம் : 


2013- மைக் ஹசி மற்றும் பிராவோ (சிஎஸ்கே)


கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸின் மைக்கேல் ஹஸ்ஸி 733 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியை வென்றார். அதே அணியில் இடம் பெற்றிருந்த டுவைன் பிராவோ 32 விக்கெட்டுகளுடன் பர்பிள் கேப்பை கைப்பற்றினார். 


2017- டேவிட் வார்னர் மற்றும் புவனேஸ்வர் குமார் (சன்ரைசர்ஸ்)


ஐபிஎல் 2017 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் 641 ரன்களுடன் ஆரஞ்சு தொப்பியையும், அதே அணியில் இருந்த புவனேஷ்வர் குமார் 26 விக்கெட்டுகளுடன் ஊதா நிற தொப்பியையும் கைப்பற்றி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது ஜோடி என்ற பெருமையை பெற்றது. 






2022- ஜோஸ் பட்லர் மற்றும் சாஹல் (ராஜஸ்தான்)


இவர்களின் வரிசையில் தற்போது ஜோஸ் பட்லர் மற்றும் சாஹல் இணைந்துள்ளது. ஜோஸ் பட்லர் 863 ரன்கள் அடித்து ஐபிஎல் 2022 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார். அதே அணியில் இடம் பெற்றிருந்த சாஹல் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண