2023-ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ளது. கோப்பையை கைப்பற்றுவதற்காக குஜராத் – சென்னை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. நான்கு முறை சாம்பியனான சென்னை அணிக்கு இணையாக பலமான அணியாக குஜராத் அணி உலா வருவதற்கு முக்கிய காரணமாக திகழ்வது சுப்மன் கில் ஆகும்.


ப்ளே-ஆப் சுற்று வாய்ப்புக்காக பெங்களூர் அணிக்காக விராட்கோலி அசத்தல் சதம் அடித்தபோது, அவரது சதத்திற்கு இணையான சதம் அடித்து பெங்களூரு கனவை சிதைத்தார் சுப்மன்கில். அதேபோல, நேற்று நடந்த குவாலிஃபயர் 2-ஆம் சுற்று ஆட்டத்தில் இறுதிப்போட்டிக்கு செல்லும் கனவோடு களமிறங்கிய மும்பை அணிக்கு எதிராக மிரட்டலான சதம் விளாசி அவர்களின் கனவையும் சிதைத்துள்ளார்.


கடந்தாண்டு முதலே சுப்மன் கில் பேட்டிங் பல மடங்கு மெருகேறி உள்ளது என்பதே உண்மை. டி20, ஒருநாள், டெஸ்ட், ஐ.பி.எல். என அனைத்து போட்டிகளிலும் சதங்களை விளாசி இந்திய அணியின் வருங்காலம் என்பதை கில் உணர்த்தியுள்ளார். இந்த நிலையில், சுப்மன் கில் தொடர்ச்சியாக 3-வது முறையாக ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார்.


2021-ஆம் ஆண்டு:


2021-ஆம் ஆண்டு நடந்த துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் கொல்கத்தா அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கினார். 198 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 43 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


2022-ஆம் ஆண்டு:


கடந்தாண்டு நடந்த அகமதாபாத்தில் நடந்த இறுதிப்போட்டியில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி குஜராத் அணிக்கு 131 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய குஜராத் அணிக்காக சுப்மன்கில் பொறுப்புடன் ஆடி 43 பந்துகளில் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்திக் பாண்ட்யா 34 ரன்களும், டேவிட் மில்லர் 32 ரன்களும் எடுத்ததாலும் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அறிமுக சீசனிலே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.


2023-ஆம் ஆண்டு:


அகமதாபாத்தில் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் சென்னை – குஜராத் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் குஜராத் அணிக்காக சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். நடப்பு சீசனில் 3 சதங்களுடன் 800-க்கும் மேற்பட்ட ரன்களுடன் ஆரஞ்சு தொப்பையை தன் வசமாக்கி வைத்திருக்கும் சுப்மன் கில் சென்னை அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் கில் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பாரா? என்பதே குஜராத் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


தோனி, கரண் சர்மாவிற்கு பிறகு தொடர்ந்து 3 முறை ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடும் பெருமை சுப்மன் கில்லுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.