18வது சீசன் ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்திற்கு வந்துள்ளது. நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆர்சிபி - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ஆடி வரும் இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை. இந்த நிலையில், தங்களது முதல் கோப்பைக்காக 18 வருட காத்திருப்புடன் இரு அணிகளும் நாளை மோதுகின்றன.
இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரண்டு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளின் விவரங்களை கீழே காணலாம்.
- ஆர்சிபி - பஞ்சாப் இரு அணிகளும் இதுவரை 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
- பஞ்சாப் அணி ஆர்சிபிக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு தரம்சாலாவில் அடித்த 232 ரன்களே அவர்களது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
- ஆர்சிபி அணி பஞ்சாப்பிற்கு எதிராக கடந்தாண்டு அதே தரம்சாலாவில் 241 ரன்களை விளாசியதே அவர்களின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
- ஆர்சிபி அணி பஞ்சாபிற்கு எதிராக துபாயில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த போட்டியில் 109 ரன்களுக்கு அவுட்டானதே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
- பஞ்சாப் அணி கடந்த 2015ம் ஆண்டு பெங்களூரில் பஞ்சாப்பிற்கு எதிராக 88 ரன்களுக்கு ஆல் அவுட்டானதே அவர்களின் குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.
- ஆர்சிபி அணி பஞ்சாபை 2015ம் ஆண்டு பெங்களூரில் நடந்த போட்டியில் 138 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே அவர்களின் மிகப்பெரிய வெற்றியாகும்.
- பஞ்சாப் அணி தரம்சாலாவில் 2011ம் ஆண்டு நடந்த போட்டியில் 111 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியதே அவர்களின் மிகப்பெரிய வெற்றி ஆகும்.
- பஞ்சாப் அணிக்கு எதிராக 2015ம் ஆண்டு பெங்களூரில் நடந்த போட்டியில் கிறிஸ் கெயில் 117 ரன்கள் எடுத்ததே ஆர்சிபி அணிக்காக தனிநபரின் அதிகபட்சம் ஆகும்.
- ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக 2020ம் ஆண்டு கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்ததே அந்த அணிக்கான தனி நபர் அதிகபட்சம் ஆகும்.
- ஆர்சிபி அணிக்காக கடந்த 2011ம் ஆண்டு பெங்களூரில் நடந்த போட்டியில் ஸ்ரீநாத் அரவிந்த் சிறப்பாக பந்துவீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதே பஞ்சாப்பிற்கு எதிராக சிறந்த பந்துவீச்சு ஆகும்.
- ஆர்சிபிக்கு எதிராக 2011ம் ஆண்டு தரம்சாலாவில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்காக பியூஷ் சாவ்லா 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சு ஆகும்.
- பஞ்சாப்பிற்கு எதிராக 2016ம் ஆண்டு கிறிஸ் கெயில் - விராட் கோலி இணைந்து 147 ரன்கள் விளாசியதே ஆர்சிபிக்கான சிறந்த பார்ட்னர்ஷிப் ஆகும்.
- பஞ்சாப் அணிக்காக ஆர்சிபிற்கு எதிராக 2011ம் ஆண்டு தரம்சாலாவில் கில்கிறிஸ்ட் - ஷான் மார்ஷ் இணைந்து 206 ரன்களை எடுத்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் ஆகும்.
ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என்று இந்த இரு அணிகளும் கனவுடன் உள்ளனர். ரஜத் படிதார் தலைமையிலான ஆர்சிபி அணி பேட்டிங், பவுலிங் என பலத்துடன் உள்ள நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் பேட்டிங் மற்றும் பவுலிங் பலத்துடன் உள்ளனர்.
சரிசம பலம் கொண்ட இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் நாளை அகமதாபாத் மைதானத்தில் மோத உள்ள நிலையில் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.