ஐபிஎல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐபிஎல் சீசன் 17 இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே24) நடைபெறும் குவாலிபயர் 2ல் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி மே 26 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதும். அந்தவகையில் இறுதிப் போட்டியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.
போஸ்டர் சர்ச்சை:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாக ஒரு போஸ்டர் ஒன்று வெளியானது.
அதாவது குவாலிபயர் 2 தொடங்குவதற்கு முன்பே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளதாக சேப்பாக்கம் மைதானத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனைப்பார்த்த ரசிகர்கள் இன்னும் குவாலிபயர் போட்டியே முடியவில்லை அதற்குள் எப்படி இந்த இரண்டு அணிகள் தான் இறுதிப் போட்டியில் மோதும் என்பது போன்ற பேனரை வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். அதோடு இந்த பேனர் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
உண்மை என்ன?
உண்மை என்னவென்றால் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்ற நான்கு அணிகளின் பேனர்களுமே மைதானத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இருக்கும் பேனர் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கும் பேனர்.
அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளெசிஸ் ஆகியோறின் புகைப்படங்கள் கொண்ட பேனர்கள் இடம் பெற்று இருக்கிறது. ஆக சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியின் கேப்டன்களின் புகைப்படங்கள் தான் இருக்கிறது. இதன் மூலம் சமூகவலைதளங்களில் இரண்டு கேப்டன்கள் மட்டுமே இருப்பது போன்ற பேனர் தொடர்பான புகைப்படம் வெளியானது உண்மையில்லை என்பது தெளிவாகிறது.
மேலும் படிக்க: