உலகில் மிக பிரபலமான கிரிக்கெட் லீக் தொடர்களில் ஒன்றான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 15வது சீசனான இந்த ஐபிஎல் தொடரை இனி வரும் ஆண்டுகளில் டிவியில் ஒளிபரப்பு செய்வதற்கான டெண்டரை அறிவித்திருக்கிறது பிசிசிஐ.
இது குறித்து பிசிசிஐ இன்று வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், “2023-2027-ம் ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர்களை ஒளிபரப்பு செய்வதற்கான தொலைக்காட்சி உரிமைக்கு டெண்டர் விடுக்கிறோம். ரூ. 25 லட்சம் செலுத்தி இந்த டெண்டர் அழைப்பிதழை பெற்று கொள்ளலாம். இந்த தொகை திருப்பி கொடுக்கப்படாது. மே 10, 2022 வரை இந்த அழைப்பிதழை கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம்” என தெரிவித்திருக்கிறது.
தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஐபிஎல் தொடரை ஒளிபரப்பி வரும் நிலையில், 2023-ம் ஆண்டுக்குப் பிறகான ஐபிஎல் தொடரை ஒளிபரப்பு செய்ய புதிய நிறுவனம் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “2 புதிய அணிகளின் வருகையில் டாடா ஐபிஎல் தொடர் அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இ-ஆக்ஷன் முறையில் ஐபிஎல் தொலைக்காட்சி உரிமைக்கான டெண்டர் நடைபெறும்” என தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த இ-ஆக்ஷன் 2022 ஜூன் 19-ம் தேதி நடைபெறும். இதனால், இந்திய கிரிக்கெட் அடுத்த கட்டத்தை எட்டும்” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்