ஐபிஎல் 2022 தொடருக்கான ஆயத்த பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் ஏலம் வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரம் நடைபெறலாம் எனவும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனை அடுத்து, ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி வரும் பிப்ரவரி மாதம் 11-ம் தேதி முதல் 13-ம் தேதிக்குள் இந்த மேகா ஏலம் நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆல்-ரவுண்டராக விளையாடி வந்த ஹர்திக், அகமதாபாத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. அதே போல, மற்றொரு புதிய அணியான லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுலை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 2022 தொடரில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
10 அணிகள் பங்கேற்க இருக்கும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 4 கிரிக்கெட் மைதாங்களிலேயா அனைத்து போட்டிகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அல்லது, துபாய்க்கு மாற்றம் செய்யப்படும் திட்டம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தால், ப்ரெபோர்ன் மைதானம், வான்கடே, டிஒய் பட்டில் மைதானம், மகாரஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானம் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் போட்டிகள் நடத்தப்படலாம் என தெரிகிறது.
கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாகவும் மற்றும் மூன்றாவது அலை பயம் காரணமாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை பிசிசிஐ ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளது. அதனால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்