ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரபலமான பல வீரர்களும் நேற்றே ஏலத்தில் விலை போகிய நிலையில் இன்று அடுத்த கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பிரபல வீரர் வில் ஜேக்சை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது.


வில் ஜேக்சை தட்டிச் சென்ற மும்பை:


கடந்த ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சிறப்பாக ஆடியவர். இவரது அதிரடியான பேட்டிங்கை கண்டு எதிரணியினர் அச்சம் அடைந்தனர். இந்த ஏலத்தில் இவரை பெங்களூர் அணி தக்க வைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அவரை ஏலத்தில் மும்பை அணியிடம் விட்டுக் கொடுத்தது ஆர்.சி.பி.


வில் ஜேக்சை அடிப்படை விலையான 2 கோடியில் இருந்து ரூபாய் 5.25 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. அப்போது, RTM  முறைப்படி வில் ஜேக்சை தக்க வைத்துக் கொள்கிறீர்களா? என்று ஆர்.சி.பி. அணி நிர்வாகத்திடம் கேட்டபோது ஆர்.சி.பி. நிர்வாகம் இல்லை என்று கூறினர். இதனால், மும்பை அணியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தேடிச் சென்று நன்றி சொன்ன ஆகாஷ் அம்பானி:


மகிழ்ச்சியில் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நிர்வாகத்தினர் இருக்கைக்கே சென்று கை கொடுத்து நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






மும்பை அணிக்காக முக்கிய வீரராக ஆடி வந்த டிம் டேவிட் இந்த ஏலத்தில் ஆர்.சி.பி. அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த பலரும் முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டு வீரர்களை மாற்றிக் கொண்டுள்ளனரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 26 வயதான வில் ஜேக்ஸ் இதுவரை 8 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 சதம், 1 அரைசதம் உள்பட 230 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 100 ரன்களை எடுத்துள்ளார். வில் ஜேக்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த சீசனில் மிரட்டலாக ஆடி சதம் விளாசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


இங்கிலாந்த அணிக்காக 23 டி20 போட்டிகளில் ஆடி 383 ரன்கள் எடுத்துள்ளார். 15 ஒருநாள் போட்டிகளில் 4 அரைசதங்களுடன் 468 ரன்கள் எடுத்துள்ளார். 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 89 ரன்கள் எடுத்துள்ளார். ஆல்ரவுண்டரான வில் ஜேக்ஸ் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டும், டி20யில் 1 விக்கெட்டும், ஐ.பி.எல். போட்டியில் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.