ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருந்த இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஐபிஎல் லீக்கின் மினி ஏலம் இன்று அதாவது டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர்கள், தென்னாப்பிரிக்கா வீரர்கள் மற்றும் நியூசிலாந்து வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக உலகக் கோப்பையை வென்ற, ஐசிசி சாம்பியன்ஸ்ஷிப்பை வென்ற இங்கிலாந்துக்கு எதிராக ஆஷஷ் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் அதிக விலைக்கு எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.


அதேபோல் இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுள்ளார். இவரை கொல்கத்தா அணி ரூபாய் 24.75 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேபோல் ஐசிசி டிராபிகளை ஆஸ்திரேலியாவுக்கு ஒரே ஆண்டில் வென்று கொடுத்த கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது. மிட்ஷெல் ஸ்டார்க்குக்கு அடுத்தபடியாக அதிக விலைக்கு போன வீரர் வரிசையில் பேட் கம்மின்ஸ் உள்ளார். 


இவர்களுக்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டேரில் மிட்ஷெல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூபாய் 14 கோடிக்கு வாங்கியுள்ளது. இவர் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியிலும் அரையிறுதிப் போட்டியிலும் சதம் விளாசினார். இந்திய தற்பவெட்ப சூழலுக்கு ஏற்ப டேரில் மிட்ஷெல் களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடுவார் என்பதால் சென்னை அணிக்கு அவர் மிகவும் பலமான வீரராக இருப்பார். நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன மூன்றாவது வீரர் இவர்தான். 


பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கிய வீரர்களில் மிகவும் முக்கியமான வீரராக பார்க்கப்படும் வீரர் ஹர்ஷல் பட்டேல். இந்திய வேகப்பந்து வீச்சாளரான இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 11.75 கோடிக்கு வாங்கியுள்ளது. நடந்து முடிந்த மினி ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர் ஹர்ஷல் பட்டேல். நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன நான்காவது வீரர் இவர்தான். 


நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன ஐந்தாவது வீரராக அல்ஜாரி ஜோசப். இவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11.50 கோடிக்கு வாங்கியுள்ளது. 


நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர்களில் பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது. டாப் 5 வீரர்களில் கூட 4 வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்கள்தான். ஒருவர் மட்டும்தான் பேட்ஸ்மேனாக உள்ளார்.