IPL Auction 2024: அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான ஏலத்தில், 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஐபிஎல் ஏலம் 2024:
கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல், தற்போது சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது. oவ்வொரு ஆண்டிலும் 40 நாட்களுக்கு மேல் நடைபெறும் இந்த தொடரை, கிரிக்கெட் திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் இந்த தொடரில் பங்கேற்க, பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு ஆர்வம் காட்டும் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் தங்களது பெயர்களை முன்பதிவு செய்கின்றனர். அவர்களுக்கான ஏலம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதன் மூலம், 10 அணிகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில், 2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் இன்று துபாயில் நடைபெற உள்ளது.
எங்கு, எப்போது ஏலம் நடைபெறுகிறது?
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 17வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம், இன்று துபாயில் நடைபெற உள்ளது. அந்த ஊரின் ஏலம் உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணிக்கும், இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கும் தொடங்கும். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தை நேரலையில் எங்கு பார்க்கலாம்?
ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்களின் ஏலம் Star Sports நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட்டு, Jio Cinema மூலம் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும். ரசிகர்கள் இதனை கண்டு ரசிக்கலாம். ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல்முறையாக வீரர்களுக்கான ஏலத்தை, மல்லிகா சாகர் என்ற பெண் நெறியாளர் தொகுத்து வழங்க உள்ளார்.
வீரர்களின் விவரங்கள்:
2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் இறுதி ஏலப்பட்டியலில் 333 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதிகபட்சமாக 77 இடங்கள் 10 அணிகளால் நிரப்பப்பட உள்ளன. அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்களாக இருப்பார்கள். மொத்தத்தில் 214 இந்திய வீரர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் உடன், அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இரு வீரர்களும் பங்கேற்கின்றனர். அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த இருவருடன் 116 சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும், 215 சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத வீரர்களும் உள்ளனர். குறைந்தபட்சமாக 20 லட்சம் தொடங்கி, அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை ஒரு வீரரின் அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
அணி நிர்வாகங்களிடம் இருக்கும் தொகை..!
குஜராத் டைட்டன்ஸ் (ரூ. 38.15 கோடி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (ரூ. 34 கோடி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ரூ. 32.7 கோடி), சென்னை சூப்பர் கிங்ஸ் (ரூ. 31.4 கோடி), பஞ்சாப் கிங்ஸ் (ரூ. 29.1 கோடி), டெல்லி கேபிடல்ஸ் (ரூ. 28.95 கோடி), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ரூ. 23.25 கோடி), மும்பை இந்தியன்ஸ் (ரூ. 17.75 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ரூ.14.5 கோடி), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரூ. 13.15 கோடி).
இளம் & வயதான வீரர்:
ஏலத்தில் பங்கேற்பதில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 17 வயதான குவேனா மபாகா, ஐபிஎல் 2024 ஏலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வீரர் ஆவார். அதேநேரம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 38 வயதான முகமது நபி ஐபிஎல் 2024 ஏலத்திற்கான தேர்வுப்பட்டியலில் மிகவும் வயதான வீரர் ஆக இருக்கிறார்.