IPL 2026 Auction Top Players: ஐபிஎல் 2026 மினி ஏலத்தில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் அதிகப்படியான தொகையுடன் பங்கேற்க உள்ளன.
ஐபிஎல் மினி ஏலம்:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிக்கான மினி ஏலம், வரும் டிசம்பர் 16ம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. 10 அணிகளிலும் உள்ள 77 காலி இடங்களை நிரப்புவதற்காக, ஆயிரத்து 355 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இதில் 928 அன்கேப்ட் வீரர்கள் உட்பட ஆயிரத்து 62 பேர் இந்தியர்கள் ஆவர். அன்கேப்ட் இந்தியர்களில் 118 பேர் ஏற்கனவே ஐபிஎல் அணிகளில் இடம்பெற்றவர்கள் ஆவர். சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற 196 பேர் உட்பட 293 வெளிநாட்டு வீரர்களும் இந்த ஏலத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
மேட்ச் வின்னர்களுக்கு டிமேண்ட்
இந்த மினி ஏலத்தில் ஒற்றை ஆளாகவே சில போட்டிகளை வென்று கொடுக்கக் கூடிய மேட்ச் வின்னர்களுக்கு பெரும் தேவை நிலவுகிறது. அதன்படி ஆல்-ரவுண்டர்கள் மீது பெரும் தொகையை செலவிட அணி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதன்படி, கேமரூன் க்ரீன் இந்த ஏலத்தில் அதிகப்படியான தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, மேக்ஸ்வெல் மற்றும் ரசல் ஆகியோரின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஏலத்தில் தங்களது பெயர்களையே அவர்கள் பதிவு செய்யவில்லை. இதனால் சில அணிகள் ஏமாற்றம் கண்டுள்ளன. இதையடுத்து, இந்த ஏலத்தில் யார் யாருக்கெல்லாம் டிமேண்ட் அதிகரித்துள்ளது? கோடிகளில் புரளப்போவது யார்? என்பது குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
கோடிகளில் புரள வாய்ப்புள்ள வீரர்கள்?
1. கேமரூன் க்ரீன்
மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ள ஆஸ்திரேலிய பேட்டிங்-வேகப்பந்து வீச்சு ஆல் - ரவுண்டரான கேமரூன் க்ரீன், கடந்த ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இந்நிலையில், ரூ.2 கோடி என்ற அடிப்படைத் தொகை பிரிவில் இந்த முறை தனது பெயரை அவர் பதிவு செய்துள்ளார். சர்வதேச போட்டிகளில் அஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.இதனால், கைவசம் அதிக தொகை கொண்டுள்ள கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள், க்ரீனை கைப்பற்ற கடும் போட்டியில் ஈடுபடலாம். பெங்களுரு அணியும் அவர் மீது ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.
2. வெங்கடேஷ் அய்யர்
கடந்த ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் ஆல்-ரவுண்டர் வெங்கடேஷ் அய்யரை, கொல்கத்தா அணி பெங்களூருவுடன் கடுமையாக போட்டிபோட்டு 23.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், 2025 சீசனில் அவர் எதிர்பார்த்த அளவில் ஜொலிக்கவில்லை. இதையடுத்து அவரை விடுவித்தாலும், அதிகப்படியான கையிருப்பு உள்ளதால் மீண்டும் மினி ஏலத்தில் மலிவு விலையில் அவரை வசப்படுத்த கொல்கத்தா அணி தீவிரம் காட்டக்கூடும். ஆனாலும், ஆல்-ரவுண்டர்களை எதிர்பார்க்கும் பல அணிகளும் வெங்கடேஷ் அய்யரை குறிவைக்கலாம்.
3. மதிஷா பத்திரனா
துல்லியமான யார்கர்கள் மூலம் கவனம் ஈர்த்த பத்திரனாவை, கடந்த மெகா ஏலத்தின் போது சென்னை அணி 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாத சூழலில் அவரை விடுவித்து, நாதன் எல்லிஸை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது. ஆனாலும், மலிவான தொகைக்கு பதிரனாவை மீண்டும் ஒப்பந்தம் செய்ய சென்னை அணி ஆர்வம் காட்டலாம். அதேநேரம், பெங்களூரு உள்ளிட்ட அணிகள் அவருக்காக கோதாவில் இறங்கலாம்.
4. லியம் லிவிங்ஸ்டன்
தனது அதிரடி பேட்டிங்கிற்கு பெயர்போன லிவிங்ஸ்டன், பந்துவீச்சிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திறனை கொண்டுள்ளார். இதன் காரணமாகவே கடந்த மெகா ஏலத்தில் 10.75 கோடி ரூபாயை கொட்டி பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. அந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றபோதிலும், லிவிங்ஸ்டன் அதில் பெரிய பங்களிப்பை வழங்க தவறியதால் மினி ஏலத்திற்கு முன்பாக விடுவிக்கப்பட்டார். ஆனாலும், எவ்வளவு பெரிய மைதானமாக இருந்தாலும், அநாயசமாக சிக்சர்களை விளாசக்கூடிய லிவிங்ஸ்டனிற்கு இந்த முறையும் நல்ல போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. ரவி பிஷ்னோய்
சுழற்பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில், 2025 மெகா ஏலத்திற்கு முன்பாக லக்னோ அனி பிஷ்னோயை 11 கோடிக்கு தக்கவைத்துக் கொண்டது. ஆனால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போனதால் தற்போது அவரை விடுவித்துள்ளது. ஆனாலும், மீண்டும் அவரை அணியில் இணைக்க லக்னோ முயற்சிக்கலாம். வேறு சில அணிகளும் அவரின் ஒப்பந்தத்தை பெற முயலலாம்.
மேற்குறிப்பிடப்பவர்கள் மட்டுமின்றி ஜேக் ஃப்ரேஷர் மெக்கர்க்.ரச்சின் ரவீந்திரா, டேவிட் மில்லர், ஹசரங்கா, சாய் ஹோப் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரும் இந்த ஏலத்தில் பெரும் தொகைக்கு ஏலம்போக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
அணிகள் வசம் உள்ள கையிருப்பு:
- கொல்கத்தா - ரூ.64.3 கோடி
- சென்னை - ரூ.43.4 கோடி
- ஐதராபாத் - ரூ.25.50 கோடி
- லக்னோ - ரூ.22.95 கோடி
- டெல்லி - 21.80 கோடி
- பெங்களூரு - 16.40 கோடி
- ராஜஸ்தான் - ரூ.16.05 கோடி
- குஜராத் - ரூ.12.90 கோடி
- பஞ்சாப் - ரூ.11.50 கோடி
- மும்பை - ரூ.2.75 கோடி