sunrisers hyderabad vs rajasthan royals  ஐபிஎல் தொடரின் 2வது போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹைதரபாத் அணிக்காக டிராவிஸ் ஹெட் 67 ரன்கள் விளாச, இஷான் கிஷான் சிக்ஸர், பவுண்டரி என விளாசி 45 பந்துகளில் சதம் விளாசினார். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 286 ரன்களை எடுத்தது. 


287 ரன்கள் டார்கெட்:


287 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் ஆட்டத்தை தொடங்கினர். ஜெய்ஸ்வால் 1 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்னில் அவுட்டானார். ஆனாலும், சஞ்சு சாம்சன் பவுண்டரிகளை விளாசினார். ஆனால், மறுமுனையில் நிதிஷ் ராணா 11 ரன்னில் அவுட்டாக அடுத்து சாம்சன் - துருவ் ஜோரல் ஜோடி சேர்ந்தது. 


இலக்கு கடினமாக இருந்தாலும் இந்த ஜோடி போராடியது. சாம்சனும், துருவ் ஜோரல் இருவரும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினர். குறிப்பாக, ஜோரல் சிக்ஸர் மழை பொழிந்தார். இதனால், ராஜஸ்தானின் ரன் ரேட் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் சென்று கொண்டிருந்தது. 


சாம்சன் - துருவ் ஜோரல் போராட்டம்:


முகமது ஷமி, சிமர்ஜித்சிங், கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, ஆடம் ஜம்பா, ஹர்ஷல் படேல் என அனைவரது பந்துவீச்சையும் இந்த ஜோடி விளாசியது. ராஜஸ்தான் அணிக்காக போராடிய சாம்சன் ஹர்ஷல் படேல் பந்தில் அவுட்டானார். அவர் 37 பந்துகளில் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.


இலக்கு மிகப்பெரியதாக இருந்ததால் கடைசி 6 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 126 ரன்கள் தேவைப்பட்டது. இலக்கை எட்ட முடியாவிட்டாலும் ரன்ரேட்டை கருத்தில் கொண்டு அடித்து ஆட முயற்சித்தனர். ஆனால், சாம்சன் அவுட்டான அடுத்த ஓவரிலே பேட்டிங்கில் அதிரடி காட்டிய துருவ் ஜோரல் அவுட்டானார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். 


242 ரன்கள் விளாசிய ராஜஸ்தான்:


 ராஜஸ்தான் அணி 15 ஓவர்களில் 169 ரன்களை எடுத்தது. இருப்பினும் சுபம்துபே - ஹெட்மயர் ஜோடி அடித்து ஆடியது. சுபம் துபே சிக்ஸர்களாக விளாசினார். இவர்களது அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 200 ரன்களை கடந்தது. 


கடைசி கட்டத்தில் சுபம் துபே, ஹெட்மயர் சிக்ஸர்களாக விளாசினர். தோல்வி உறுதியான நிலையில் ரன் ரேட்டிற்காக ராஜஸ்தான் அணி அபாரமாக ஆடியது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில்  6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. இதனால், சன்ரைசரஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


528 ரன்கள் டார்கெட்:


சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் மிகவும் மோசமாக பந்துவீசினார். 4 ஓவர்களில் விக்கெட் எதுவுமே எடுக்காமல் 60 ரன்களை அவர் விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் இரு அணியின் சார்பிலும் 528 ரன்கள் எடுக்கப்பட்டது. முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமாக ரன்மழை பொழிந்த போட்டியாக இந்த போட்டி அமைந்தது.