IPL 2025 Resumes RCB Vs KKR: போர் பதற்றம் காரணமாக இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இன்று முதல் மீண்டும் தொடங்குகின்றன.

மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, நடப்பாண்டு ஐபிஎல் போட்டி எதிர்பாராதவிதமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான மோதலானது முடிவுக்கு வந்துள்ளதால், இன்று தொடங்கி வரும் ஜுன் 3ம் தேதி வரை மீதமுள்ள போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பிளே-ஆஃப் வாய்ப்பை சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் இழந்துள்ள நிலையில், முதல் நான்கு இடங்களை பிடிக்க மீதமுள்ள 7 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு - கொல்கத்தா பலப்பரீட்சை:

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. ஆர்சிபி அணி 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனானா கொல்கத்தா அணியோ, 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 11 புள்ளிகளை பெற்று 6வது இடத்தில் தொடர்கிறது. கடைசியாக விளையாடிய 5 லீக் போட்டிகளில் ஆர்சிபி 5 வெற்றிகளையும், கொல்கத்தா 2 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 20 முறையும் , பெங்களூரு அணி 15 முறையும் வெற்றிபெற்றுள்ளன. இந்த போட்டிகளில் அதிகபட்சமாக ஒரு போட்டியில் கொல்கத்தா 222 ரன்களையும், குறைந்தபட்சமாக பெங்களூரு அணி 49 ரன்களையும் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிளே-ஆஃப் வாய்ப்பு:

பெங்களூரு அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெறும். ஒருவேளை தோல்வியுற்றாலும், மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே, பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல போதுமானதாக இருக்கும். கொல்கத்தா அணியை பொறுத்தவரையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதோடு, இதர லீக் போட்டிகளின் முடிவுகளும் சாதகமாக அமைய வேண்டியுள்ளது.

ஐபிஎல் 2025 - புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
குஜராத் 11 8 3 16
பெங்களூரு 11 8 3 16
பஞ்சாப் 11 7 3 15
மும்பை 12 7 5 14
டெல்லி 11 6 4 13
கொல்கத்தா 12 5 6 11
லக்னோ 11 5 6 10
ஐதராபாத் 11 3 7 7
ராஜஸ்தான் 12 3 9 6
சென்னை 12 3 9 6