IPL 2025 RCB Vs SRH: ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் வலுவான குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.

Continues below advertisement

குஜராத்தை பந்தாடிய லக்னோ:

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் வெளியேறிய நிலையில், குஜராத், ஆர்சிபி, பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதேநேரம், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் எவை என்பது இன்னும் உறுதியாகவில்லை. இதனால், நான்கு அணிகள் இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தான் நேற்றைய லீக் போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ல்கனோ அணியில் மார்ஷின் சதம் மற்றும் பூரானின் அரைசதத்தால், 20 ஓவர்கள் முடிவில் 235 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் 202 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. இதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அந்த அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது.

குஷியில் 3 அணிகள்:

முதல் இரண்டு இடங்களை பிடிக்க பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நான்கு அணிகளும் தீவிரம் காட்டுகின்றன. இதனால், இனி நடைபெறும் ஒவ்வொரு போட்டியின் முடிவுகளும் நான்கு அணிகளுக்கும் சாதக பாதகங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் தான் குஜராத் அணியின் தோல்வி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேற பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கான வாய்ப்பை உயர்த்தியுள்ளது. ஒருவேளை அடுத்த போட்டியிலும் குஜராத் அணி தோல்வியுற்று, மற்ற அணிகள் வெற்றி பெற்றால் புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களுக்கு நான்கில் எந்தவொரு அணியும் முன்னேறக்கூடும்.

Continues below advertisement

ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
குஜராத் 13 9 4 18 0.602
பெங்களூரு 12 8 3 17 0.482
பஞ்சாப் 12 8 3 17 0.389
மும்பை 13 8 4 16 1.292
டெல்லி 13 6 6 13 -0.019
லக்னோ 13 6 7 12 -0.337
கொல்கத்தா 13 5 6 12 0.193
ஐதராபாத் 12 4 7 9 -1.005
ராஜஸ்தான் 14 4 10 8 -0.549
சென்னை 13 3 10 6 -1.030

 

முதலிடத்தை பிடிக்குமா ஆர்சிபி?

பரபரப்பான சூழலில் லக்னோவில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 8 வெற்றிகளுடன், 17 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 19 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறக்கூடும். மறுமுனையில் ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணி, 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் லக்னோ அணி குஜராத்திற்கு அதிர்ச்சியை கொடுத்தது போன்று, பெங்களூரு அணிக்கு ஐதராபாத் ஆச்சரியமளிக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 25 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஐதராபாத் அணி 13முறையும், பெங்களூரு அணி 11 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிகபட்சமாக ஐதராபாத் 287 ரன்களையும், குறைந்தபட்சமாக பெங்களூரு 68 ரன்களையும் ஒரு போட்டியில் பதிவு செய்துள்ளது.