IPL 2025 RCB: ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் ப்ளே ஆஃப் உறுதி செய்யும் போட்டிகளாகவே இனி வரும் ஒவ்வொரு போட்டியும் அமைகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் பல அணிகளுக்கும் அவர்களது சொந்த மைதானம் தற்போது வரை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நல்ல அனுபவத்தை தரவில்லை. 

சொந்த மைதான சோகம்:

குறிப்பாக, ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 5 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. இதில் ஆர்சிபி பெற்ற 5 வெற்றிகளுமே எதிரணியின் மைதானத்தில் வந்தது. சொந்த மைதானத்தில் குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம் தோல்வியைத் தழுவியது. 

மற்ற அணிகள் பெரும்பாலும் தங்களது சொந்த மைதானத்தில் நல்ல ஃபார்முக்கு திரும்பிவிட்டன. சில அணிகள் சொந்த மற்றும் எதிரணியின் மைதானம் இரண்டிலும் தோல்வியைத் தழுவி வருகின்றன. ஆனால், ஆர்சிபி அணி எதிரணியின் மைதானத்தில் கர்ஜித்தும், சொந்த மைதானத்தில் சொதப்பியும் வருகின்றன. 

நாளை மீண்டும் மோதல்:

பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சின்னசாமி மைதானத்தில் 42 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்பு, டிம் டேவிட் அதிரடியால் 95 ரன்களை எட்டியது. 

இந்த நிலையில், மீண்டும் நாளை தங்களது சொந்த மைதானத்தில் ஆர்சிபி அணி களமிறங்குகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்த சீசனில் ஏற்கனவே வெற்றி பெற்ற ஆர்சிபி, நாளை மீண்டும் களமிறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆர்சிபி அணி ராஜஸ்தான் அணியுடன் இந்த தொடரில் தனது இரண்டு வெற்றியையும் பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பை காட்டிலும் சொந்த மைதானத்தில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் சோகத்திற்கு முடிவு கட்டுவார்களா? என்ற எதிர்பார்ப்பே ஆர்சிபி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 

வெற்றியைத் தீர்மானிக்கும் பந்துவீச்சு:

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆர்சிபி அணிக்கு சிறந்த பந்துவீச்சு பட்டாளம் இந்த முறை அமைந்துள்ளது. புவனேஷ்வர், ஹேசில்வுட், யஷ் தயாள் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களுடன் குருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா, லிவிங்ஸ்டன் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களும் அமைந்துள்ளனர். வெளியில் ஸ்வப்னில் சிங் எனும் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும் உள்ளனர். பந்துவீச்சை மிகச்சரியாக சொந்த மைதானத்தில் பயன்படுத்தினால் நிச்சயம் ஆர்சிபிக்கு சொந்த மைதானத்தில் வெற்றி கிட்டும். 

மேலும், பேட்டிங்கில் பில் சால்ட், விராட் கோலி, படிக்கல், படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ஷெப்பர்ட், குருணல் பாண்ட்யா என நீண்ட பேட்டிங் பட்டாளம் உள்ளனர். இவர்கள் அதிரடி காட்டினால் நிச்சயம் மீண்டும் பெங்களூர் மைதானம் ஆர்சிபி-யின் கோட்டையாக மாறும். ஏனென்றால், இந்த மைதானத்தில் 200 ரன்களுக்கு மேல் அடித்தாலும் எளிதாக எட்ட முடியும் என்பதே இந்த மைதானத்தில் பந்துவீச்சாளர்களுக்கு உள்ள சவால் ஆகும். 

இந்த மைதானத்தில் டாஸ் வெல்ல வேண்டியதும் மிகவும் அவசியமான ஒன்றாகும். ராஜஸ்தான் அணியில் இளம் வீரர் சூர்யவன்ஷி, ஜெய்ஸ்வால், பராக், ஹெட்மயர், நிதிஷ் ராணா, துருவ் ஜோரல் ஆகிய வீரர்கள் உள்ளனர். பந்துவீச்சிலும் ஆர்ச்சர், சந்தீப் சர்மா,  துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா, ஹசரங்கா ஆகியோர் உள்ளனர். 

முடிவுக்கு வருமா?

கடந்த சில போட்டிகளாகவே வெற்றியின் அருகில் வரை சென்று தோல்வியைத் தழுவும் ராஜஸ்தான் அணி வெற்றிப்பாதைக்குத் திரும்ப போராடும் என்பதால் ஆர்சிபி-க்கு கடும் சவால் நாளைய போட்டியில் காத்திருக்கிறது. இதனால், ஆர்சிபி-யின் சொந்த மைதான சோகத்திற்கு முடிவு வருமா? அல்லது தொடருமா? என்று ஏக்கப் பெருமூச்சுடன் ஆர்சிபி ரசிகர்கள் காத்துள்ளனர்.