Virat Kohli: பெங்களூரு அணி 18 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

பட்டம் வென்ற விராட் கோலி

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி கோப்பையை வென்றது. ஐபிஎல் தொடங்கியது முதலே போட்டிகளில் பங்கேற்று வந்தாலும், 10 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும், அதில் மூன்று முறை இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தாலும், பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்தது.இந்நிலையில், 18 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு, இளம் கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் நடப்பாண்டில் களமிறங்கிய பெங்களூரு அணி தனது முதல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. ஒட்டுமொத்த பெங்களூரு மற்றும் விராட் கோலி ரசிகர்களும் இதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

கோலி...கோலி..

சாம்பியன் பட்டம் வென்றதும் மைதானத்தில் குவிந்து இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும், கோலி..கோலி என முழங்க தொடங்கினர். ஏற்கனவே கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கண்கலங்கி நின்ற கோலி, ரசிகர்களின் பேராதரவை கண்டு திகைத்து போனார். இளமை பருவம் தொடங்கி, தனது உச்சபட்ச ஃபார்மை கடந்து, மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராகவும் தொடர்ந்து, பெங்களூரு அணிக்காக கோப்பையை வென்றது மிகவும் பெருமிதமாக இருப்பதாக கோலி மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இக்கட்டான நிலையில் பெங்களூரு அணி நிர்வாகம் எனக்கு துணை நின்றது, நான் அணிக்காக நின்றேன். இன்று நாங்கள் கோப்பையை வென்றுள்ளோம். எனது கடைசி ஐபிஎல் போட்டி வரை நான் பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என கண்கள் குளமாகி நீர் வழிய மகிழ்ச்சி மற்றும் பெருமிதம் ஒன்று சேர குறிப்பிட்டார்.