IPL 2025 RCB vs GT: ஐபிஎல் தொடரில் இன்று நடந்து வரும் போட்டியில் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேருக்ழகு நேர் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன்கில் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பவுலிங் மிரட்டல்:
இதன்படி, ஆட்டத்தை விராட் கோலி - பில் சால்ட் ஜோடி தொடங்கினர். பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய விராட் கோலியை அர்ஷத் கான் அவுட்டாக்கினார். விராட் கோலி 7 ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த படிக்கல் 4 ரன்னில் போல்டானார். சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய பில் சால்ட் சிராஜ் பந்தில் போல்டானார். முகமது சிராஜ் மிரட்டலாக பந்துவீசினார். கேப்டன் படிதார் அணிக்காக சிறப்பாக ஆட முயற்சித்த நிலையில் அவர் 12 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
42 ரன்ளுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், லிவிங்ஸ்டன் ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். லிவிங்ஸ்டன் தடுமாறி வந்த நிலையில், ஜிதேஷ் சர்மா அதிரடி காட்டினார். அவர் பவுண்டரி, சிக்ஸர் விளாச லிவிங்ஸ்டன் ஓரிரு ரன்களாக எடுத்தார்.
சுழல், வேகம் மிரட்டல்:
சிறப்பாக ஆடிய ஜிதேஷ் சர்மா சாய் கிஷோர் சுழலில் அவுட்டானார். அவர் 21 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த குருணல் பாண்ட்யாவும் 5 ரன்னில் அவுட்டாக ஆர்சிபி அணி 15 ஓவர்களில் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. பொதுவாக சின்னசாமி மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக திகழும் மைதானம் ஆகும். ஆனால், இன்றைய போட்டியில் அதற்கு மாறாக குஜராத்தின் வேகமும், சுழலும் நன்றாக எடுபட்டது. லிவிங்ஸ்டன், டேவிட் அதிரடி:
இதையடுத்து, அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆர்சிபி ஆளானது. இதையடுத்து, லிவிங்ஸ்டன் - டிம் டேவிட் அதிரடியாக ஆடத்தொடங்கினர். ரஷீத்கான் வீசிய 18வது ஓவரில் மட்டும் லிவிங்ஸ்டன் 3 சிக்ஸர்கள் விளாசினார். மேலும் அவரும் அரைசதம் விளாசினார். இதனால், 18.1 ஓவரில் 150 ரன்களை ஆர்சிபி எட்டியது. சிறப்பாக ஆடிய லிவிங்ஸ்டன் 40 பந்துகளில் 1 பவுண்டரி 5 சிக்ஸருடன் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். 19வது ஓவரை முகமது சிராஜ் மிகவும் கட்டுக்கோப்பாக வீசினார்.
170 ரன்கள் டார்கெட்:
கடைசி ஓவரில் டிம் டேவிட் 1 சிக்ஸர் 2 பவுண்டரி விளாசி கடைசி பந்தில் போல்டானார். கடைசியில் டிம் டேவிட் காட்டிய அதிரடியால் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிம் டேவிட் கடைசியில் 18 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்தார்.
சிராஜ் அபாரம்:
குஜராத் அணியில் முகமது சிராஜ் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ரஷீத்கான் 4 ஓவர்களில் 54 ரன்களை வாரிவழங்கினார்.