ஐபில் தொடர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் பெங்களூரில் நேற்று நடந்த ஆர்சிபி - சென்னை போட்டி ரசிகர்களுக்கு மறக்க முடியாத விருந்தாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியை ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. 

கொண்டாடாத கோலி:

ஆர்சிபி-யின் வெற்றி ஒரு பக்கம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் விராட் கோலியை நினைத்து ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஏனென்றால், நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவர் விராட் கோலி. 33 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 62 ரன்களை விராட் கோலி விளாசினார். 

ஆனால், பேட்டிங்கில் நேற்று ஆக்ரோஷமாக ஆடிய கோலி அரைசதம் விளாசியபோது அதை பேட்டை உயர்த்தி கொண்டாடவில்லை. மேலும், இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி ஆயுஷ் மாத்ரே, ப்ரெவிஸ், தோனி விக்கெட்டை வீழ்த்தியபோதும் அவர் அதை கொண்டாடவில்லை. நடப்பு தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை 500 ரன்களை கடந்து கைப்பற்றினார். ஆனாலும் அந்த மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தவில்லை. இது அனைத்திற்கும் மேலாக இறுதிப்போட்டியைப் போல பரபரப்பாக  இறுதிவரை பரப்பாக நடந்த இந்த போட்டியில் த்ரில் வெற்றி பெற்றபோதும் விராட் கோலி அந்த வெற்றியை பெரிதும் கொண்டாடவில்லை. மேலும், ஃபீல்டிங்கில் உலகத்தரம் வாய்ந்த விராட் கோலி நேற்றைய போட்டியில் முக்கியமான கட்டத்தில் ஜடேஜா கைக்கு தந்த கேட்ச்சை கோட்டைவிட்டார்.

என்னாச்சு கோலிக்கு?

விராட் கோலி என்றாலே ஆக்ரோஷமும், வெற்றியை அவர் கொண்டாடும் விதமுமே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும். ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சென்னை அணியை சேப்பாக்கம் மற்றும் பெங்களூர் என இரண்டு இடங்களிலும் ஆர்சிபி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை விராட் கோலி துளியளவு கூட கொண்டாடவில்லை. 

தோனிதான் காரணமா?

இதன் பின்னணியில் இருப்பது தோனி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களாக திகழ்பவர்கள் விராட் கோலி, தோனி. ஐபிஎல் தொடரை கோடிக்கணக்கான ரசிகர்கள் விரும்பி பார்ப்பதற்கு இவர்கள் இருவரும் பிரதான காரணம் ஆகும். 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனான தோனி இந்திய அணிக்காக தலைமை தாங்கிய போட்டிகளில் அவரின் தளபதியாக திகழ்ந்தவர் விராட் கோலி. தோனி 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கும், சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதற்கும் முக்கிய காரணமாக திகழ்ந்தவர் விராட் கோலி. உடன்பிறவா அண்ணன் - தம்பிகளாகவே உலா வந்த இவர்கள் இருவரும் இணைந்து விளையாடும் கடைசி போட்டி நேற்று நடந்த போட்டி என்றே பலரும் கணித்துள்ளனர். இதன் காரணமாகவே, தோனிக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும் அவர் இனிமேல் விளையாடப்போவதில்லை என்ற சோகம் காரணமாகவும் விராட் கோலி கவலையுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏனென்றால், தொடர் தோல்வி, விமர்சனங்கள், வயது உள்ளிட்ட பல காரணங்களால் 43 வயதான தோனி அடுத்த சீசனில் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது. தோனியுடன் இணைந்து விளையாடும் கடைசி போட்டி என்பதாலே விராட் கோலி எதையும் கொண்டாடவில்லை என்றும் ரசிகர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். 

அவ்னித் கபூர் காரணமா?

அதேசமயம், நடிகை அவ்னித் கபூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை விராட் கோலி அதிகளவு லைக் செய்திருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்திருந்த நிலையில், அந்த விவகாரத்தால் அவர் மன உளைச்சல் ஆளாகியிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

எதுவாகினும், ரசிகர்கள் பலரும் விராட் கோலியை இவ்வாறு பார்க்க மிகவும் கடினமாகவும், கவலையாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். விராட் கோலி எப்போதும் இயல்பாக மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.