கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஒவ்வொரு முறை ஐ.பி.எல். தொடர் நடைபெறும்போதும் 5 முறை பட்டம் வென்ற மும்பை மற்றும் சென்னை அணிக்கு நிகரான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆகும்.
ஆர்.சி.பி.:
மும்பை மற்றும் சென்னை அணிக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணி ஆர்.சி.பி. இதுவரை 17 சீசன்களில் ஆடியிருந்தாலும் ஒரு முறை கூட ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்றதில்லை. ஆனாலும், அந்த அணி மீது இவ்வளவு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதும், அந்த அணிக்கு இவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதற்கும் ஒரே காரணம் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி ஆகும்.
17 தொடர்களாக அந்த அணிக்காக கோப்பையை வென்று தந்த போராடிக் கொண்டிருக்கிறார். பல சீசன்களில் தனி ஆளாக அணிக்காக ஆடியுள்ளார். ஆர்.சி.பி. அணியின் பலவீனமாக இத்தனை தொடர்களில் இருந்து வந்தது பந்துவீச்சு ஆகும். அதை இந்த ஏலத்தில் ஆர்.சி.பி. சரி செய்துள்ளதா? கோப்பையை வெல்ல தயாரான அணியை ஆர்.சி.பி. ஏலத்தில் எடுத்துள்ளதா? என்பதை கீழே காணலாம்.
2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஆர்.சி.பி. அணி:
பேட்ஸ்மேன்கள்:
- விராட் கோலி
- ரஜத் படிதார்
- லிவிங்ஸ்டன்
- பில் சால்ட்
- ஜிதேஷ் சர்மா
- டிம் டேவிட்
- தேவ்தத் படிக்கல்
- சுவஸ்திக் சிகாரா
ஆல் ரவுண்டர்கள்:
- குருணல் பாண்ட்யா
- சுவப்னில் சிங்
- ரொமோரியோ ஷெப்பர்ட்
- மனோஜ் பண்டேகே
- ஜேகப் பெதேல்
- மோகித் ரதி
பந்துவீச்சாளர்கள்:
- ஹேசில்வுட்
- புவனேஷ்வர்
- ரஷிக்தர்
- சுயாஷ் சர்மா
- நுவான் துஷாரா
- லுங்கி நிகிடி
- யஷ் தயாள்
- அபிநந்தன் சிங்
பந்துவீச்சு குறை சரியாகுமா?
ஏலத்தில் முதல் நாளில் கையில் காசு இருந்தும் கே.எல்.ராகுல், ரிஷப்பண்ட் இருவரில் ஒருவரை ஆர்.சி.பி. அணி எடுக்காததை பலரும் விமர்சித்தனர். ஆனாலும், அடுத்த நாளில் ஆர்.சி.பி.க்கு தேவையான வீரர்களை அணி நிர்வாகம் எடுத்தது. குறிப்பாக, ஒவ்வொரு தொடரிலும் பலவீனமாக கருதப்படும் ஆர்.சி.பி.யின் பந்துவீச்சுக்கு இந்த முறை ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார், லுங்கி நிகிடி ஆகிய அனுபவ பந்துவீச்சாளர்களுடன் யஷ் தயாள், நுவான் துஷாரா ஆகியோரும் பலமாக மாறியுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இளம் வீரர் ரஷீக் தர் வேகத்தில் அசத்துவார்.
இவர்களுடன் ஆல் ரவுண்டர்களும் இந்த முறை பலமாக மாறியுள்ளனர். குருணல் பாண்ட்யா, லிவிங்ஸ்டன், சுவப்னில் சில், ஜேகப் பேத்தெல், ரொமாரியோ ஷெப்பர்ட் முக்கியமான ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். இவர்களில் ஜேக்கப் பெத்தேல் ஆர்.சி.பி.யில் இருந்து மும்பைக்குச் சென்ற வில் ஜேக்ஸ்க்கு சிறந்த மாற்று வீரராக இருப்பார் என்று கருதப்படுகிறது.
பேட்டிங் எப்படி?
ஒரு முறை கூட கோப்பையை வெல்லாவிட்டாலும் ஆர்.சி.பி.யின் பேட்டிங்கிற்கு என்று எப்போதும் ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. கெயில், டிவிலியர்ஸ், மேக்ஸ்வெல், டுப்ளிசிஸ் என மிரட்டலான பேட்டிங் படை எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. இவர்களுடன் கோலி முக்கியமான அங்கமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறார்.
இந்த முறை கோலிக்கு வலு சேர்க்கும் விதமாக ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், தேவ்தத் படிக்கல் உள்ளனர். இவர்களுடன் வில் ஜேக்ஸிற்கு மாற்றாக ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஜேக்கப் பெத்தேல், ஆல்ரவுண்டரில் பேட்டிங்கில் கலக்கும் ஷெப்பர்ட், சுவப்னில் சிங், குருணல் பாண்ட்யாவும் பக்கபலமாக மாறியுள்ளனர்.
அரசனுக்கு அரசணை கிட்டுமா?
இரண்டு முறை இறுதிப்போட்டிக்குச் சென்ற ஆர்.சி.பி. சமீபகாலமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லும் அணிகளில் தவிர்க்கவே முடியாத அணியாக உள்ளது. குறிப்பாக, கடந்த முறை முதல் 7 போட்டிகளில் தோல்வி அடைந்து அடுத்த அனைத்து போட்டிகளிலும் நெருக்கடியில் களமிறங்கி ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்றது மறக்கவே முடியாதது ஆகும்.
சென்னை, மும்பை மட்டுமின்றி லக்னோ, ஹைதரபாத், பஞ்சாப் என அனைத்து அணியும் தங்களது அணியை வலுவாக்கியுள்ள நிலையில் மற்ற 9 அணிகளுக்கும் சவால் அளித்து முதன்முறையாக மகுடத்தை ஆர்.சி.பி. சூட்டுமா? கிரிக்கெட்டின் அரசன் விராட் கோலியின் கையில் ஐ.பி.எல். கோப்பையை தருவார்களா? என்பதை காணலாம். ஆர்.சி.பி. அணி ஏலத்தில் எடுத்துள்ள வீரர்கள் திறமையானவர்கள் என்றாலும், சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்வு செய்தால் அவர்களால் கண்டிப்பாக மகுடத்தை தட்டிச் செல்ல முடியும்.