IPL 2025 Points Table: ஐஎபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தாவை, மும்பை அணி எதிர்கொள்ள உள்ளது.

மீண்டும் சென்னை அணி தோல்வி

வார இறுதியான ஐபிஎல் தொடரில் நேற்று விசாகப்பட்டினத்தில் முதலில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில்,  ஐதராபாத் அணியை டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து இரவு கவுகாத்தியில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 182 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணியில், அபாரமாக செயல்பட்ட கேப்டன் ருதுராஜ் 63 ரன்களை குவித்தார். ஆனால், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்ததால், 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. சென்னை அணி தொடர்ச்சியாக 2வது போட்டியில் தோல்வி கண்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டிற்குப் பிறகு சென்னை அணி 17-க்கும் அதிகமான ரன்களை சேஸ் செய்ததே இல்லை என்ற மோசமான பயணம் தொடர்கிறது. மேலும் புள்ளிப்பட்டியலிலும் கடும் சரிவை கண்டுள்ளது.

புள்ளிப்பட்டியல் - ஐபிஎல்  2025

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள்
பெங்களூரு 2 2 0 4
டெல்லி 2 2 0 4
லக்னோ 2 1 1 2
குஜராத் 2 1 1 2
பஞ்சாப்  1 1 0 2
கொல்கத்தா 2 1 1 2
சென்னை 3 1 2 2
ஐதராபாத் 3 1 2 2
ராஜஸ்தான் 3 1 2 2
மும்பை 2 0 2 0

வான்கடேவில் வாகை சூடுமா மும்பை?

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போடிட்யில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை , மும்பை அணி எதிர்கொள்கிறது. வான்கடேவில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ரகானே தலைமையிலான கொல்கத்தா அணி முதல் போட்டியில் தோற்றாலும், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணி, முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வி கண்டுள்ளது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் நோக்கில் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. மும்பை அணியின் பேட்டிங் காரணமாகவே, முதல் இரண்டு போட்டியிலும் அந்த அணி தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

வான்கடே மைதானம் எப்படி?

மும்பை வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரியாக திகழ்கிறது. பவுண்டரி எல்லைகள் சிறியது என்பதால், கடினமான ஸ்கோரை கூட எளிதில் சேஸ் செய்ய முடியும். இதன் காரணமாக, இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்யும்.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 23 முறை மும்பை அணியும், 11 முறை மட்டுமே கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக கொல்கத்தா அணி ஒருமுறை 232 ரன்களை குவித்துள்ளது.