IPL 2025 MI RCB: ஐபிஎல் தொடரில் இன்று மும்பை மற்றும் லக்னோ, டெல்லி மற்றும் பெங்களூரு என இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

கொல்கத்தா -பஞ்சாப் போட்டியை கெடுத்த மழை:

ஐபிஎல் தொடரில் நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 201 ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி ஒரு ஓவர் முடிவில் 7 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பொழிந்ததால் போட்டி கைவிடப்பட்டு, இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், 11 புள்ளிகளுடன் பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியது. அதேநேரம், போட்டி சமனில் முடிந்ததால் கொல்கத்தா அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு குறைந்துள்ளது. அந்த அணி தற்போது 9 போட்டிகளில் விளையாடி வெறும் 7 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.

ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:

அணி போட்டி வெற்றி தோல்வி சமன் ரன்ரேட் புள்ளிகள்
குஜராத் டைட்டன்ஸ் 8 6 2 0 1.104  12
டெல்லி கேபிடல்ஸ் 8 6 2 0 0.657 12
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 6 3 0 0.482 12
பஞ்சாப் கிங்ஸ் 9 5 3 1 0.177  11
மும்பை இந்தியன்ஸ் 9 5 4 0 0.673 10
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 9 5 4 0 -0.054 10
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 3 5 1 0.212 7
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 3 6 0 -1.103 6
ராஜஸ்தான் ராயல்ஸ் 9 2 7 0 -0.625 4
சென்னை சூப்பர் கிங்ஸ் 9 2 7 0 -1.302  4

மும்பை Vs  லக்னோ:

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் விளையாடி, தலா 5 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முறையே 5 மற்றும் ஆறாவது இடத்தை வகிக்கின்றன. இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் மும்பை அணி ஒரே அடியாக மூன்றாவது இடம் வரை முன்னேறலாம். அதேநேரம், லக்னோ அணி வெற்றி பெற்றால் நான்காவது இடம் வரை முன்னேறலாம். மும்பை அணி கடைசியாக விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே உத்வேகத்தில் இன்றைய உள்ளூர் போட்டியிலும் வெற்றி பெற முனைப்பு காட்டுகிறது. அதேநேரம், லக்னோ கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் இரண்டு தோல்விகளை பெற்றுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் யாருக்கு?

டெல்லியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும்பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் தலா 12 புள்ளிகளை பெற்று முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன. நடப்பு தொடரில் பெங்களூரு அணி வெளியூர் மைதானத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், ஆர்சிபி அணியை அதன் சொந்த மைதானத்திலேயே டெல்லி அணி வீழ்த்தியுள்ளது. இதனால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.