Suryakumar yadav: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், மும்பை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Continues below advertisement

சூர்யகுமாரின் விளையாட்டு

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஐதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது அவர் அருகே வந்த மும்பை வீரரும், இந்திய டி20 அணியின் கேப்டனுமான சூர்யகுமார் யாதவின் நகைச்சுவையான செயல்பாடு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும், அதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி உள்ளது.

பேண்ட் பாக்கெட்டில் கைவிட்ட சூர்யகுமார்

போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தனது முதல் ஓவரை வீச வந்தார்.  அபிஷேக் சர்மா, களத்தில் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அருகே வந்த சூர்யகுமார் யாதவ், கடந்த போட்டியை போன்று இந்த முறையும் ஏதேனும் பேப்பர் துண்டை பாக்கெட்டில் வைத்திருக்கிறாயா? என அபிஷேக்கிடம் கேட்டார். அவர் இல்லை என சொன்ன பிறகும், தகவலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அபிஷேக்கின் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு சூர்யகுமார் தேடியுள்ளார். ஆனால் அதில் பேப்பர் துண்டு எதுவும் கிடைக்கவில்லை. விளையாட்டாக தனது ஜுனியரிடம் சூர்யகுமார் யாதவ் நடந்துகொண்டது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் நடந்த அந்த ஓவரிலேயே அபிஷேக் ஆட்டமிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

எதற்கு பேப்பர் துண்டு?

மும்பை அணியை எதிர்கொள்வதற்கு முன்னதாக, பஞ்சாப் அணிக்கு எதிராக ஐதராபாத் அணி விளையாடி இருந்தது. அதில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக், 40 பந்துகளில் 100 ரன்களை விளாசி ஐபிஎல் வரலாற்றில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அப்போது தனது பாக்கெட்டில் இருந்து ஒரு துண்டு சீட்டை ரசிகளை நோக்கி காட்டினார். அதில் தனது இந்த சதத்தை ஐதராபாத் அணி ரசிகர்களுக்கு சமர்பிப்பதாக குறிப்பிட்டார். அந்த போட்டியில் 55 பந்துகளில் 141 ரன்களை விளாசி, ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிகபட்ச சேஸிங்கை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகித்தார். அந்த நிகழ்வு வைரலானதை தொடர்ந்து, அதேபோன்று துண்டு சீட்டு ஏதேனும் மீண்டும் வைத்து இருக்கிறாரா? என்று தான் அபிஷேக்கின் பாக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் கையை விட்டு தேடினார். இந்திய டி20 அணியில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் அபிஷேக் சர்மா விளையாடி வருவது குறிப்பிடத்தகக்து.