IPL 2025 MI Vs RR: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை அணி அபாரம்:

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன் மற்றும் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி, அரைசதம் விளாசினர். இந்த கூட்டணி முதல் விக்கெட்டிற்கு 116 ரன்கள் குவித்தது. ரிக்கல்டன் 61 ரன்களிலும், ரோகித் சர்மா 53 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்காக 6000 ரன்களை கடந்த வீரர் என்ற பட்டியலில் கோலிக்கு அடுத்ததாக ரோகித் சர்மா இடம்பெற்றுள்ளார். இறுதிகட்டத்தில் கேப்டன் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 48 ரன்கள் குவித்தனர்.

இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் வந்த வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஆர்ச்சர் மட்டுமே 30 ரன்களை சேர்த்தார். இதனால், ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கே ஆல்-அவுட்டானது. 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் போல்ட் மற்றும் கரண் சர்மா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

புள்ளிப்பட்டியலில் மும்பை முதலிடம்:

தொடர்ந்து ஆறாவது போட்டியில் வெற்றி பெற்ற மும்பை அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்பு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த மும்பை அணி,தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றாலே, அந்த அணி தனது பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும். அதன்படி, வரும் 6ம் தேதி குஜராத் அணியுடனும், 11ம் தேதி பஞ்சாப் அணியுடனும், 15ம் தேதி டெல்லி அணியுடனும் மும்பை மோத உள்ளது. இதில் இரண்டு போட்டிகள் உள்ளூர் மைதானமான வான்கடேவில் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:

அணி போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
மும்பை இந்தியன்ஸ் 11 7 4 14 1.274
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 7 3 14 0.521
பஞ்சாப் கிங்ஸ் 10 6 3 13 0.199
குஜராத் டைட்டன்ஸ் 9 6 3 12 0.748
டெல்லி கேபிடல்ஸ் 10 6 4 12 0.362
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 5 5 10 -0.325
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 4 5 9 0.271
ராஜஸ்தான் ராயல்ஸ் 11 3 8 6 -0.780
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9 3 6 6 -1.103
சென்னை சூப்பர் கிங்ஸ் 10 2 8 4 -1.211

சிஎஸ்கே வரிசையில் ராஜஸ்தான்:

முன்னதாக 8 போட்டிகளில் தோல்வியுற்ற சென்னை, நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், ராஜஸ்தான் அணியும் தனது 8வது போட்டியில் தோல்வியுற்றது. மீதமுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றாலு, வெறும் 12 புள்ளிகளை மட்டுமே எட்ட முடியும். இதன் காரணமாக நடப்பு தொடரில் இருந்து இரண்டாவது அணியாக ராஜஸ்தான் அணி வெளியேற்றப்பட்டுள்ளது. அதேநேரம், பிளே-ஆஃப் சுற்றுக்கான முதல் நான்கு இடங்களுக்கான அணிகள் ஒன்று கூட உறுதியாகவில்லை.

விட்டதை பிடிக்குமா குஜராத்?

இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள குஜராத் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், ஒரே அடியாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். அதேநேரம், பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நீட்டிக்க ஐதராபாத் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், ஐதராபாத் அணி வெற்றியும், குஜராத் அணி தோல்வியையும் பதிவு செய்துள்ளது.