ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் முக்கியமான போட்டியில் லக்னோ - மும்பை அணிகள் மோதி வருகின்றன. வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
மிரட்டிய ரிக்கெல்டன்:
பேட்டிங்கைத் தொடங்கிய மும்பை அணிக்கு ரோகித் சர்மா - ரிக்கெல்டன் அபாரமான தொடக்கத்தை அளித்தனர். ரோகித் சர்மா 2 சிக்ஸர்களை விளாசி அச்சுறுத்த மயங்க் யாதவ் வேகத்தில் அவுட்டானார். அவர் 5 பந்துகளில் 2 சிக்ஸருடன் 12 ரன்களுடன் அவுட்டானார். அதன்பிறகு ரிக்கெல்டன் - வில் ஜேக்ஸ் ஜோடி சேர்ந்தனர்.
ஜேக்ஸ் நிதானமாக ஆட ரிக்கெல்டன் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாச மும்பை இந்தியன்ஸ் ரன்ரேட் எகிறிக்கொண்ட போனது. மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ், பிஷ்னோய் என யார் வீசினாலும் ரிக்கெல்டன் அதிரடி காட்டினார். அபாரமாக ஆடிய அவர் அரைசதம் கடந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்:
லக்னோவை அச்சுறுத்திக் கொண்டிருந்த அவரை திக்வேஷ் தனது சுழலால் வெளியேற்றினார். அவரது சுழலில் ரிக்கெல்டன் 32 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 58 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆட, வில் ஜேக்சும் அதிரடி காட்ட முயற்சித்தார்.
ஆனால், வில் ஜேக்ஸ் பிரின்ஸ் யாதவ் பந்தில் போல்டானார். அவர் 21 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்பின்பு, லக்னோ பந்துவீச்சால் மும்பைக்கு நெருக்கடி அளித்தது. திலக் வர்மா 6 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னிலும் அவுட்டானார்.
சூர்யா மிரட்டல் அரைசதம்:
விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தார்.- அவருக்கு நமன்தீர் ஒத்துழைக்கத் தொடங்கினார். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரைதசம் விளாசினார். அரைசதத்திற்கு பிறகு அவர் அதிரடி காட்ட முயற்சித்த நிலையில் அவர் அவுட்டானார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
அதன்பின்பு, நமன்தீர் அதிரடி காட்ட முயற்சித்தார். நமன்தீரும், கார்பினும் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசியதால் மும்பை 200 ரன்களை கடந்தது. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய கார்பின் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 215 ரன்களை எடுத்தது. மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ், பிஷ்னோய், ஆவேஷ் கான் என பந்துவீசிய அனைவரும் தலா 40 ரன்களுக்கு மேல் ரன்களை வாரி வழங்கினர்.