ஐபிஎல் தொடரில் இன்று வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - லக்னாே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் லக்னோ அணிக்கு 216 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.
206 ரன்கள் டார்கெட்:
மிகவும் வலுவான இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்க வீரர் மார்க்ரம் 9 ரன்னில் அவுட்டானாலும், பூரண் - மார்ஷ் ஜோடி அதிரடியாக ஆடியது. குறிப்பாக, பூரண் சிக்ஸர்களாக விளாசினார். ஆனால், இந்த ஜோடியின் அதிரடி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட்டில் ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை வில் ஜேக்ஸ் பிரித்தார். அரவது சுழலில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பூரண் அவுட்டானார். அவர் 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்பின்பு, கேப்டன் ரிஷப்பண்ட் களமிறங்கினார். பவுலிங்கில் மிரட்டிய மும்பை:
இந்த சீசன் முழுவதும் சொதப்பி வரும் ரிஷப்பண்ட் இந்த போட்டியில் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் வில் ஜேக்ஸ் சுழலில் அதே ஓவரில் 4 ரன்னில் அவுட்டானார். 64 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மார்ஷ் அவுட்டானார். அவர் 24 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்து அவுட்டாக பதோனி - மில்லர் ஜோடி சேர்ந்தது. மும்பை வெற்றி:
இலக்கு பெரியதாக இருந்ததால் இருவரும் அதிரடியாக ஆடினர். பதோனி பவுண்டரி, சிக்ஸராக விளாசி மில்லர் பவுண்டரி மூலம் ரன் சேர்த்தார். இந்த நிலையில் சிறப்பாக ஆடிய பதோனியை போல்ட் அவுட்டாக்கினார். அவரது பந்தில் 22 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்து பதோனி அவுட்டாக, அடுத்த சில நிமிடங்களில் 24 ரன்களில் மில்லர் அவுட்டானார். அப்துல் சமத்தும் 2 ரன்னில் அவுட்டாக லக்னோ தோல்வி உறுதியானது. 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பும்ரா 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், போல்ட் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த வெற்றி மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மீண்டும் நான்காவது இடத்திற்கு மும்பை முன்னேறியுள்ளது.