ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 18வது சீசன் இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியும், பெங்களூரு அணியும் மோதியது. கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ரஹானேவும், பெங்களூர் அணிக்கு முதன்முறை கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரஜத் படிதாரும் டாஸ் போட மைதானத்திற்கு வந்தபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.


முதல் ஓவரிலே விக்கெட்:


முதல்முறையாக கேப்டனாக களமிறங்கிய படிதார் டாஸ் வென்றார். இதையடுத்து, அவர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து, கொல்கத்தா அணிக்காக டி காக் - சுனில் நரைன் ஆட்டத்தை தொடங்கினர். பெங்களூர் அணி புவனேஷ்வர்குமாரை பெஞ்சில் உட்கார வைத்தது. இதனால், முதல் ஓவரை ஹேசில்வுட் வீசினார். 


அவர் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தையே டி காக் பவுண்டரிக்கு விளாச அடுத்த பந்தில் அவர் அளித்த எளிதான கேட்ச்சை சுயாஷ் சர்மா கோட்டை விட்டார். இருப்பினும் அதே ஓவரில் டி காக் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் 4 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 


மிரட்டிய ரகானே:


அவர் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் ரஹானே - சுனில் நரைன் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் 3 ஓவர் வரை நிதானமாக ஆடினார். அதன்பின்பு, இளம் வீரர் ரஷீக்தர் வீசிய முதல் ஓவரிலே ரகானே பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். அதன்பின்பு, அவர் தனது அதிரடியை நிறுத்தவே இல்லை.


கேப்டன் படிதார் குருணல் பாண்ட்யா, சுயாஷ் சர்மா, லிவிங்ஸ்டன் , யஷ் தயாள் என மாறி, மாறி பயன்படுத்தியும் இந்த ஜோடி அதிரடியை நிறுத்த முடியவில்லை. ரஷீக் ஓவரில் அதிரடி காட்டிய சுனில் நரைன் அவரது பந்திலே அவுட்டானார். அவர் 26 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார்.


ஆட்டத்தை மாற்றிய குருணல் பாண்ட்யா:


இதன்பின்பு, கொல்கத்தாவின் பேட்டிங் வரிசையை குருணல் பாண்ட்யா சீர்குலைத்தார். அவரது சுழலில் அதிரடி காட்டிக் கொண்டிருந்த கேப்டன் ரஹானே ரஷீக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 31 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். 


அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் குருணல் பாண்ட்யா சுழலில் போல்டாக, ஆபத்தான ரிங்குசிங்கும் 12 ரன்னில் குருணல் பாண்ட்யா சுழலில் போல்டானார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுயாஷ் சர்மா ஓவரில் கொல்கத்தா ரன்களை விளாசினாலும் அவரது கடைசி ஓவரில் ஆபத்தான ரஸல் 4 ரன்னில் போல்டானார்.


174 ரன்கள் டார்கெட்:


இதன்பின்பு, அவர்களது ரன்வேட்டையில் வேகம் குறைந்தது. கொல்கத்தா அணிக்காக அதிரடி காட்டிய ரகுவன்ஷி 30 ரன்களில் அவுட்டானார். கடைசி ஓவரை ஹேசில்வுட் கட்டுக்கோப்பாக வீசினார். கடைசி 10 ஓவர்களில் பெங்களூர் அணி சிறப்பாக பந்துவீசியதால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. 200 ரன்களை எடுக்க வேண்டிய கொல்கத்தா அணியை பெங்களூர் அணி கடைசி 10 ஓவர்களில் கட்டுப்படுத்தினார்.


ஹேசில்வுட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். குருணல் பாண்ட்யா 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.