Hardik Pandya Mumbai Indians: மும்பை இந்தியன்ஸில் டாப் ஆர்டர் தொடர்ந்து சொதப்பி வருவது, அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

தடுமாறும் மும்பை இந்தியன்ஸ்:

ஐபிஎல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அணியாகவும், ஐந்து முறை கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் மும்பை இந்தியன்ஸ் கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த சீசனைப் போலவே நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலும், வெற்றிகளை குவிக்க முடியாமல் மும்பை அணி திணறி வருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் நான்கு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறவேண்டுமானால், குறைந்தபட்சம் மீதமுள்ள 9 போட்டிகளில் குறைந்தது ஆறில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஆனால், அணி மற்றும் வீரர்களை செயல்பாட்டை பார்த்தால் அது சாத்தியமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

சொதப்பும் டாப்- ஆர்டர்:

கடந்த ஆரம்ப போட்டிகளிலாவது ரோகித் சர்மா ஓரளவிற்கு பேட்டிங்கில் அசத்தினார். ஆனால், இந்த முறை இதுவரை களமிறங்கிய நான்கு போட்டிகளிலும் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளார். மற்றொரு தொடக்க வீரரான ரிக்கெல்டன் ஒரே ஒரு போட்டியில் மட்டும் அரைசதம் கடந்தார். மற்ற நான்கு போட்டிகளிலும் சுமாரான ரன்களை பதிவு செய்துள்ளார். சூர்யகுமார் யாதவும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் தடுமாறி வருகிறார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியும் அதற்கு ஒரு சாட்சியாக அமைந்தது. இப்படி டாப் ஆர்டர் தொடர்ந்து சொதப்பி வருவது மும்பை அணியின் மற்ற வீரர்களின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. தோல்விக்கான பிரதான காரணமாகவும் உள்ளது.

ஏலத்தில் மாஸ், களத்தில் தமாஸ்:

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தின் முடிவில் அணிகளை ஒப்பிடும்போது, மும்பை வலுவான பிளேயிங் லெவனை கட்டமைக்க தேவையான வீரர்களை கொண்டுள்ள அணியாக திகழ்ந்தது. ஆனால், அது காகித அளவில் மட்டுமே பலனளித்துள்ளது என்பதை, 5 போட்டிகளின் முடிவுகள் காட்டுகின்றன. சரியான பிளேயிங் லெவனை தேர்தெடுக்காததும், தேர்ந்தெடுத்த வீரர்களை களத்தில் முறையாக பயன்படுத்தாததுமே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

வீரராக மிரட்டும் ஹர்திக்..

கடந்த ஆண்டு உள்ளூர் ரசிகர்களிடையே இருந்த எதிர்ப்பு தற்போது தணிந்து, தங்கள் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இதனை உணர்ந்து தனது ஆல்-ரவுண்டர் திறமையை அபாரமாக வெளிப்படுத்தி வருகிறார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 15 பந்துகளில் 42 ரன்களை விளாசி அதிரடி காட்டினார். அணியின் பிளேயிங் லெவனில் மிக முக்கிய நபர் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார். 

கேப்டனாக கோட்டை விடும் ஹர்திக் பாண்ட்யா:

வீரராக அட்டகாசமாக செயல்பட்டாலும், மும்பை கேப்டனாக அணியை திறம்பட வழிநடத்துவதில் தடுமாறுகிறார் என்பதே உண்மை. கடந்த ஆண்டு அவரது தலைமையிலான மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 10வது இடத்திற்கு சென்றது. இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் முதல் போட்டியில் களமிறங்காத ஹர்திக், இரண்டாவது போட்டியில் கேப்டனாக களம் இறங்கினார். ஆனால், முதல் போட்டியில் சென்னை அணிக்கு தோல்வி பயம் காட்டிய, விக்னேஷ் புதூரை ஹர்திக் தனது அணியில் எடுக்கவில்லை. இது மும்பை மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களையும் ஆச்சரியமடைய செய்தது.

பெங்களூரு போட்டியில் சொதப்பிய ஹர்திக்:

தனது வீரர்களின் பலம், பலவீனம் பற்றி தெரிந்திருந்தால் மட்டுமே,  அவர்களை கேப்டனால் சூழ்நிலைக்கு ஏற்ப சரியாக பயன்படுத்த முடியும். அதனை ஹர்திக் செய்ய தவறவிடுகிறார் என்பதையே பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி உணர்த்துகிறது. வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் புதிய பந்தில் திறம்பட செயல்படக்கூடியவர். அதன் காரணமாக தான் சென்னை அணிக்கான பெரும்பாலான போட்டிகளில், முதல் 10 ஓவர்களிலேயே தனது நான்கு ஓவர்களையும் சாஹர் வீசி விடுவார். அதிலும், லைன் மற்றும் லெந்தை பிடித்து வீசக்கூடியவர். ஒருமுறை அவரது ரிதம் சிதறினால் அதிக ரன்களையும் விட்டுக் கொடுக்கக் கூடியவர். அப்படி இருந்தும், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவர் வீசிய நிலையில் அவருக்கு பிரேக் கொடுத்தது என்பது மும்பைக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. அதிலும் அவருக்கு மாற்றாக வில் ஜேக்ஸை பந்துவீச வைத்தது எல்லாம் மிகவும் தவறான முடிவு என, ரசிகர்கள் கூட முனுமுனுத்தனர்.

விக்னேஷ் புதூர் வேண்டாமா?

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் விக்னேஷ் புதூர் மும்பை அணியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். ஆனால், அவருக்கு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீச வாய்ப்பளிக்கப்பட்டது. அதிலும் அதிரடியாக ஆடி வந்த தேவ்தத் படிக்கலை ஆட்டமிழக்கச் செய்தார். ஆனால், விளையாடிய 5 போட்டிகளில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து ரன்களை வாரிக்கொடுத்து வரும், சாண்ட்னருக்கு 4 ஓவர்களை வீச ஹர்திக் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதில் 40 ரன்களை விட்டுக்கொடுத்த சாண்ட்னர், ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை.

விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் மும்பை பந்துவீச்சை வெளுத்து கொண்டிருந்தாலும், டெத் ஓவர்களுக்காக பும்ராவை சேர்த்து வைத்து இருந்தது மும்பை அணிக்கான பிரமாண்ட இலக்கிற்கு காரணமானது. குறைந்தபட்சம் ஒரு ஓவரையாவது இடையில் பும்ரா வீசியிருந்தால், நிச்சயம் ஒரு விக்கெட் கிடைத்து இருக்கலாம். அல்லது விக்னேஷ் புதூரை பயன்படுத்தி இருந்தால், பெங்களூருவின் ரன்வேகமாவது குறைந்து இருக்கக் கூடும்.

நெஹ்ரா இடத்தில் யார்?

மொத்தத்தில் மும்பை அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்தே ஹர்திக் பாண்ட்யாவின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் விதமாக இல்லை. ஆனால், குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே அவர் கோப்பையை அடித்தார். இரண்டாவது ஆண்டும் இறுதிப்போட்டி வரை வழிநடத்தினார். அது எப்படி சாத்தியமானது? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஆஷிஷ் நெஹ்ராவின் வழிகாட்டுதல்கள் என்றே முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் குறிப்பிடுகின்றன. குஜராத் அணியின் ஆலோசகரான அவர், எதிரணியை முழுவதுமாக கிரகித்து ஒவ்வொரு வீரருக்குமான திட்டங்களை மிகவும் தெளிவாக வகுத்து கொடுத்தார். அதனை களத்தில் அருமையாக செயல்படுத்த, எதிர்பார்த்த முடிவுகள் ஹர்திக் பாண்ட்யாவிற்கு கிடைத்தது. அதற்கு சான்று தான், தற்போது குஜராத் அணியின் கேப்டனாக உள்ள சுப்மன் கில்லின் செயல்பாடு மற்றும் அணியின் செயல்பாடும் கூட. ஆனால், மும்பை அணியில் நெஹ்ரா மாதிரியான ஒரு ஆலோசகர் ஹர்திக்கிற்கு இல்லை. 

மும்பை அணியின் முடிவா?

இதனால் தான், அனைத்து பிரிவுகளிலும் தேவையான வலுவான தரமான வீரர்களை மும்பை அணி தேர்வு செய்து கொடுத்த பிறகும் கூட, அவர்களிடம் இருந்து எதிர்பார்த்த முடிவுகளை பெற முடியாமல் ஹர்திக் பாண்ட்யா திணறி வருகிறார். இதனை உணர்ந்து மும்பை நிர்வாகம் உரிய முடிவை எடுத்தால் அணியை எதிர்காலத்திற்கான பாதையில் சரியாக வழிநடத்த முடியும். தவறினால் அது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் ஆபத்தாக மாறலாம். அனுபவங்களால் பாடம் கற்று, ஹர்திக் தன்னை மெருகேற்றுவாரா? சூழலை உணர்ந்து செயல்படுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.