IPL 2025: ஆரம்பிச்சிட்டிங்களா? இனவெறி சர்ச்சையில் சிக்கிய ஹர்பஜன் சிங், வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ஆதாரம் இதோ..!
Harbhajan Jofra Archer: ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை, இனவெறியுடன் விமர்சித்ததாக ஹர்பஜன் சிங்கிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Harbhajan Jofra Archer: ஐதராபாத் ராஜஸ்தான் இடையேயான போட்டியின் போட்டியின் போது, வர்ணனையாளராக இருந்த ஹர்பஜன் சிங் ஜோஃப்ரா ஆர்ச்சரை விமர்சித்த விதம் பேசுபொருளாகியுள்ளது.
இனவெறி சர்ச்சையில் ஹர்பஜன் சிங்:
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டிக்கு இந்தியில் வர்ணனையாளராக இருந்த முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து, இன்வெறியுடன் பொருத்தமற்ற வார்த்தைகளால் விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஹர்பஜன் சொன்னது என்ன?
போடிட்யின் முதல் இன்னிங்ஸின்போது 18வது ஓவரை, ஆர்ச்சர் வீசும்போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆர்ச்சர் வீசிய பந்துகளை கிளாசன் அடுத்தடுத்து பவுண்டரிக்கு விரட்ட, “லண்டனில் கருப்பு டேக்ஸிகளின் மீட்டர் வேகமாக ஓடுகிறது, இங்கே ஆர்ச்சரின் ரன் மீட்டர் வேகமாக ஓடுகிறது” என வர்ணனையாளர் பெட்டியில் இருந்தபடி ஹர்பஜன் இந்தியில் பேசியுள்ளார்.
ரசிகர்கள் அதிருப்தி
இதுதொடர்பான வீடியோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் ஹர்பஜனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். கொண்டாட்டத்திற்கான தளமாக ஐபிஎல் இருக்கையில், இங்கு இதுபோன்ற இனவெறி ரீதியிலான கருத்துகளுக்கு இடமில்லை என்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இந்த செய்தி வெளியாகும் வரை, சர்ச்சை தொடர்பாக ஹர்பஜன் சிங் எந்தவித விளக்கமும் வழங்கவில்லை.
மோசமான சாதனை படைத்த ஆர்ச்சர்:
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி, அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 286 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி கடுமையாக போராடினாலும், 242 ரன்களை மட்டுமே சேர்த்து தோல்வியுற்றது. 4 ஓவர்களை வீசிய ஆர்ச்சர், ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 76 ரன்களை வாரிக்கொடுத்தார். இதனால், ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்துள்ளார்.