IPL 2025 CSK Vs RR: ஐபிஎல் தொடரில் ஐதராபாத்திடம் தோல்வியுற்ற லக்னோ அணி, பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்தது.

Continues below advertisement

பொட்டியை கட்டிய லக்னோ..

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை நீட்டிக்க, கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் ஐதராபாத்திற்கு எதிரான போட்டியில் லக்னோ அணி களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் குவித்தது. ஆனால், இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, ஹென்றிச் கிளாசன்,  இஷான் கிஷன் மற்றும் கமிண்டு மெண்டிஸ் ஆகியோர் அட்டகாசமாக பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர். இதனால், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற லக்னோ அணி நடப்பு தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. ஏற்கனவே நடப்பு தொடரில் இருந்து வெளியேறிய ஐதராபாத் அணி பதிவு செய்த, நான்காவது வெற்றி இதுவாகும்.

ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டி வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்ரேட்
குஜராத் 12 9 3 18 0.795
பெங்களூரு 12 8 3 17 0.482
பஞ்சாப் 12 8 3 17 0.389
மும்பை 12 7 5 14 1.156
டெல்லி 12 6 5 13 0.260
கொல்கத்தா 13 5 6 12 0.193
லக்னோ 12 5 7 10 -0.506
ஐதராபாத் 12 4 7 9 -1.005
ராஜஸ்தான் 13 3 10 6 -0.701
சென்னை 12 3 9 6 -0.992

கவனம் பெறும்  மும்பை Vs டெல்லி:

பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மூன்று அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், லக்னோ அணி தொடரிலிருந்து வெளியேறியதால் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி கவனம் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நாளை வான்கடே மைதானத்த்தில் நடைபெற உள்ளது. இதில் மும்பை அணி வெற்றி பெற்றால், 16 புள்ளிகளை பெற்று பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். ஒருவேளை தோல்வியுற்றால், பஞ்சாப் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வெற்றி பெறுவதோடு, டெல்லி அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியுற்றால் தான் மும்பையால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.

Continues below advertisement

டெல்லி அணியை பொறுத்தவரையில் தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். இல்லையெனில் ஏதேனும் ஒரு போட்டியில் வென்று, மும்பை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வி காண வேண்டும்.

கடைசி இடத்தை தவிர்க்குமா சென்னை?

இதனிடையே, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், அடுத்த ஆண்டிற்கான பயிற்சி ஆட்டமாகவே இது தொடர்கிறது. போட்டியின் முடிவுகள் பிளே-ஆஃப் கணக்குகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரம், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை தவிர்க்க இன்றைய போடிட்யில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அப்படி வெற்றி பெற்றால் 9வது இடத்திற்கு முன்னேறக்கூடும். இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 16 முறையும், ராஜஸ்தான் 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிகபட்சமாக சென்னை 246 ரன்களையும், குறைந்தபட்சமாக 109 ரன்களையும் பதிவு செய்துள்ளது.