IPL 2025 CSK Vs PBKS: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் அது மும்பை அணிக்கு பெரும் பலனை அளிக்கும்.

Continues below advertisement

டெல்லி அணி தோல்வி:

ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 204 ரன்களை குவித்தது. இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் டூப்ளெசிஸ் 62 ரன்களையும், கேப்டன் அக்சர் படேல் 43 ரன்களையும், விப்ராஜ் 38 ரன்களையும் விளாசினர். இவர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளை எட்டியது. அதேநேரம், டெல்லி அணி தனது 4வது தோல்வியை பதிவு செய்துள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல்:

அணி போட்டி வெற்றி தோல்வி சமன் ரன்ரேட் புள்ளிகள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 7 3 0 0.521 14
மும்பை இந்தியன்ஸ் 10 6 4 0 0.889 12
குஜராத் டைட்டன்ஸ் 9 6 3 0 0.748 12
டெல்லி கேபிடல்ஸ் 10 6 4 0 0.362 12
பஞ்சாப் கிங்ஸ் 9 5 3 1 0.177 11
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10 5 5 0 -0.325 10
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10 4 5 1 0.271 9
ராஜஸ்தான் ராயல்ஸ் 10 3 7 0 -0.349 6
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 9 3 6 0 0-1.103 6
சென்னை சூப்பர் கிங்ஸ் 9 2 7 0 -1.302  4

சென்னை - பஞ்சாப் மோதல்:

இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் சென்னை அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளது. இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு அணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற அதீதி தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், பஞ்சாப் அணி கடைசியாக விளையாடிய 2 போட்டிகளில் ஒன்றில் தோல்வி கண்டது. மற்றொன்று மழையால் கைவிடப்பட்டது. இதனால் இன்றைய போட்டியின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டுகிறது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில் வெற்றி பெற்றதை தொடர பஞ்சாப் அணியும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் சென்னை அணியும் களம் இறங்குகிறது.

பங்காளிக்கு உதவுமா சென்னை?

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மும்பை, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தலா 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் மும்பை புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திலும் மற்ற இரண்டு அணிகளும் அடுத்தடுத்த இடங்களையும் வகிக்கின்றன. கடைசியாக விளையாடிய போட்டியில் வென்று இருந்தால் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் வரை முன்னேறி இருக்கக் கூடும். ஆனால், குஜராத் மற்றும் டெல்லி அணிகள் இரண்டுமே, தாங்கள் கடைசியாக விளையாடிய போட்டிகளில் தோல்வியே கண்டுள்ளன.இதனால், மும்பை வலுவாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், 13 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறக்கூடும். அதுவே சென்னை அணி வெற்றி பெற்றால், பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும் மும்பை அணி தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைக்க உதவும்.