IPL 2025 CSK vs KKR: ஐபிஎல் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்த இரு அணிகளும் தங்களது வெற்றிக்காக களமிறங்கியுள்ளன. 


சென்னை அணி பேட்டிங்:


சென்னை அணிக்கு எதிரான இந்த போட்டியில் கொல்கத்தா கேப்டன் ரஹானே டாஸ் வென்று முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். ருதுராஜ் கெய்க்வாட் இல்லாததால் சென்னை அணிக்கு மீண்டும் தோனி கேப்டனாக களமிறங்குகிறார். காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து ருதுராஜ் விலகியுள்ள நிலையில், அவரது வெற்றிடம் வெற்றிகரமாக நிரப்பப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த போட்டியில் 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 201 ரன்கள் வரை எடுத்தது.


வெற்றியைத் தீர்மானிக்கும் சுழல்:


சென்னை மைதானம் சுழலுக்கு நன்றாக ஒத்துழைக்கும் என்பதால் இந்த போட்டியில் சுழலில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. வெற்றி பெறப்போவது யார்? என்பதை தீர்மானிப்பதில் பந்துவீச்சே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தோனி மீண்டும் கேப்டனாகியிருப்பது சென்னை அணிக்கு பலம் தந்தாலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கம்பேக் தந்தால் மட்டுமே அணியாக வெற்றி பெற முடியும். 


தொடர் தோல்விக்கு முடிவு கட்டுமா சென்னை?


இந்த சீசனில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்த நிலையில், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி தனது 3வது வெற்றிக்காக களமிறங்குகிறது. 


சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக ராகுல் திரிபாதி களமிறங்கியுள்ளார். முகேஷ் செளத்ரிக்கு பதிலாக அன்சுல் கம்போஜ் களமிறங்குகிறார். 


ப்ளேயிங் லெவன்:


சென்னை அணியில் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, ஷிவம் துபே, விஜய் சங்கர், ஜடேஜா, தோனி, அஸ்வின், நூர் அகமது, அன்சுல் கம்போஜ், கலீல் அகமது.


கொல்கத்தா அணியில் டி காக், சுனில் நரைன், ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், மொயின் அலி, ரஸல், ராமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா. வருண் சக்கரவர்த்தி களமிறங்குகின்றனர்.