CSK New Jersey IPL 2025: இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை கொண்ட கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல். முன்னணி வீரர்களும், இந்திய இளம் வீரர்களும் இணைந்து விளையாடும் இந்த டி20 தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையுடன் உலா வரும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். 


சி.எஸ்.கே புது ஸ்பான்சர்:


தோனி விளையாடும் காரணத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சென்னை அணி தாங்கள் களமிறங்கிய ஐ.பி.எல். தொடர் முதலே மஞ்சள் நிற சீருடையில் ஆடி வருகின்றனர். 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழு நேர ஸ்பான்சராக எதியாட் ஏர்வேஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளது. இதை சிஎஸ்கே அணியே தங்களது அதிகாரப்பூர்வ பக்கத்தில் அறிவித்துள்ளனர். 






கடந்த சீசனில் சென்னை அணியின் ஸ்பான்சாராக யூரோகிரிப் டயர்ஸ் நிறுவனமும் எதியாட் ஏர்வேஸ் நிறுவனமும் இருந்தது. ஆனால், இந்த முறை முழு ஸ்பான்சாராக எதியாட் ஏர்வேஸ் நிறுவனம் இணைந்துள்ளது. சி.எஸ்.கே. அணிக்கு ஒவ்வொரு சீசனிலும் பல அணிகள் ஸ்பான்சர்களாக திகழ்ந்துள்ளனர். 


இதுவரை ஸ்பான்சர்கள் யார்?


சி.எஸ்.கே. அணியின் ஸ்பான்சராக அவர்களது மஞ்சள் நிற சீருடையில் 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை ஏர்செல் நிறுவனம் முன்பக்கத்தில் பெயர் வரும் அளவிற்கு ஸ்பான்சராக இருந்தனர். 


2018-20ம் ஆண்டு வரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் முத்தூட் குரூப் நிறுவனம் ஸ்பான்சராக இருந்தது. 2021ம் ஆண்டு மின்த்ரா நிறுவனம் ஸ்பான்சராக இருந்தது. இதனால், அந்தந்த ஆண்டுகளில் அந்த நிறுவனங்களின் பெயர்கள் அவர்களது ஜெர்சியின் முன்பக்கத்தில் இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு முதல் கடந்த சீசன் வரை டிவிஎஸ் யூரோகிரிப் இருந்தது. கடந்தாண்டு எதியாட் ஏர்வேஸ் ஸ்பான்சராக இருந்தனர். ஆனால், அவர்களது பெயர் சீருடையின் பின்னால் இருந்தது. 


ரசிகர்கள் ஆர்வம்: 


இந்தாண்டு சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் ஸ்பான்சராக எதியாட் ஏர்வேஸ் இணைந்துள்ளனர். இவர்களின் சீருடையின் பின்புறம் நடப்பாண்டில் ஃபெட்எக்ஸ் பெயர் இடம்பெறும். மேலும், தோனியின் செவன் நிறுவனம், கல்ஃப் ஆயில் நிறுவனமும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சர்களாக திகழ்கின்றனர். 


கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணிக்காக தோனி விளையாடும் கடைசி ஐ.பி.எல். தொடராக இந்த சீசன் இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். வெற்றியுடன் விடைபெறும் என்று தோனி விரும்பும் சூழலில், இந்த சீசனில் தோனியைப் பார்க்க ரசிகர்கள் படையெடுப்பார்கள் என்று கருதப்படுகிறது. 


மேலும், கடந்த காலங்களில் சென்னை அணியின் ஸ்பான்சர்களாக ரிபோக், ஸ்பார்டன், நிவாரன் 90, கோரமண்டல் கிங், இந்தியா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் இருந்தன.