ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் இனி போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் பெறுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.


ஐபிஎல் 2025:


ஐபிஎல் சீசன் 18ன் மெகா ஏலாம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்த சீசனில் புதிய விதிகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் 2025 ஐபிஎல் தொடருக்கான கூடுதல் சிறப்பம்சமாக ஜெய் ஷா புதிய அறிவிப்பை இன்று (செப்டம்பர் 28) வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி ஒவ்வொரு வீரருக்கும் பம்பர் பரிசாக ரூ.1.02 கோடி கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.



ரூ.1.05 கோடி ஊதியம்:


இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரிலும் போட்டிக்கான ஊதியமாக ரூ.7.5 லட்சம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்கிறோம். இதன் மூலமாக ஐபிஎல் தொடரின் அனைத்து லீக் போட்டிகளிலும் விளையாடும் வீரர்களால் ரூ.1.05 கோடி ஊதியமாக பெற முடியும்.





இதற்காக ஒவ்வொரு அணியும் ரூ.12.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் குறைந்தபட்ச தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்களாலும் நல்ல ஊதியத்தை பெற முடியும்.





ஏனென்றால் ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்கள், அனைத்து போட்டிகளிலும் விளையாடும் போது அவர்களால் ரூ.1.05 கோடியை ஊதியமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.