17வது ஐபிஎல் தொடரின் 41வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிகொண்டது. இந்த ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டூ ப்ளெசிஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்த போட்டி பெங்களூரு அணியின் 250வது ஐபிஎல் போட்டி. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. 


அடுத்து 207 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக அமைந்தது. குறிப்பாக பவர்ப்ளே மிகவும் அதிர்ச்சியான பவர்ப்ளேயாக இருந்தது. ஆட்டத்தின் முதல் ஓவரின் கடைசி பந்தில் டிராவிஸ் ஹெட் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்து 4வது ஓவரில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதுவே ஹைதராபாத் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்க, 5வது ஓவரில் மார்க்ரம் மற்றும் ஹென்றிச் க்ளாசன் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறியதால், ஒட்டுமொத்த பெங்களூரு அணியும் நிம்மதியில் மூழ்கியது. இவர்கள் இருவரது விக்கெட்டினையும் பெங்களூரு அணியின் இம்பேக்ட் ப்ளேயர் ஸ்வப்னில் சிங் கைப்பற்றி அசத்தினார். 


பவர்ப்ளேவில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகாளை இழந்து 62 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து 7வது ஓவரில் மிடில் ஆர்டர்  பேட்ஸ்மேன் நிதிஷ் ரெட்டி தனது விக்கெட்டினை கரண் சர்மா பந்தில் தனது விக்கெடினை இழந்து வெளியேறினார். அதேபோல் 10வது ஓவரின் முதல் பந்தில் அப்துல் சமத் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 85 ரன்களாக இருந்தது.


இதனால் பெங்களூரு அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே பெங்களூரு ரசிகர்கள் நம்பினர். ஆனால் அதன் பின்னர் இணைந்த ஷாபாஸ் மற்றும் ஹைதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பொறுப்பாகவும் சிறப்பாகவும் விளையாடினர். குறிப்பாக கம்மின்ஸ் பெங்களூரு அணியின் ஸ்பின்னர்களை வீசிய பந்துகளை சிக்ஸருக்கும் பவுண்டரிக்கும் விளாசி வந்தார். 


ஆனால் கம்மின்ஸ் 14வது ஓவரில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.  இதனால் ஹைதராபாத் அணியின் தோல்வி உறுதியானது. கம்மின்ஸ் விக்கெட்டினை இழந்த பின்னர் ஹைதராபாத் அணி  20 ஓவர்கள் தாக்குப்பிடிக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.  கடைசி 5 ஓவர்களில் ஹைதராபாத் அணிக்கு 75 ரன்கள் தேவைப்படது. ஆனால் கைவசம் மூன்று விக்கெட்டுகள் இருந்தது. இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. இதனால் பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பெங்களூரு அணி தனது தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியும் சந்தித்துள்ளது.