இன்று ஐபிஎல் 2024ல் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேருக்குநேர் மோதி வருகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி சண்டிகரில் உள்ல மகாராஜா யத்வேந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 


முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதனடிப்படையில், ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா கூட்டணி களமிறங்கியது. வழக்கம்போல் இந்த கூட்டணி அதிரடியை காட்டி மிரளவைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்த டிராவிஸ் ஹெட், அர்ஷ்தீப் சிங் வீசிய 4வது ஓவரில் ஷிகர் தவானிடம் அவுட்டானார். 


தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் வெளியேறிய வேகத்தில் உள்ளே வந்த மார்க்ரமும் அர்ஷ்தீப் சிங் வீசிய அதே 4வது ஓவரில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்ததாக இளம் கன்று பயமறியாது என்பதுபோல் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசிய அபிஷேக் சர்மா, 11 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து, சாம் கர்ர்ன் பந்தில் அவுட்டானார்.


டிராவிஸ் ஹெட்டுக்கு பதிலாக இம்பேக்ட் பிளேயராக உள்ளே வந்த ராகுல் திரிப்பாதி, 11 ரன்களில் பாதியுடன் வெளியேற, மறுமுனையில் களமிறங்கிய நிதீஸ் ரெட்டி தனது அதிரடியால் முத்திரையை பதித்து கொண்டிருந்தார். எப்போதும் எதிரணிக்கு பயம் காட்டும் கிளாசன் 9 பந்துகளில் 9 ரன்களுடன் நடையைக்கட்டி ஏமாற்றம் அளித்தார். 






ஹர்சல் படேல் வீசிய 14 வது ஓவரில் சமத் அடுத்தடுத்து சமத்தாக இரண்டு பவுண்டரிகளை விரட்டி மிரட்டினார். 15வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விரட்டிய நிதிஸ் ரெட்டி 32 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதே ஓவரில் மீண்டும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை நொறுக்கி, பஞ்சாப் பவுலர்களை கிறங்க செய்தார். 


சமத்-தும் அதிரடி: 


நிதிஸ் ரெட்டியுடன் இணைந்த சமத்தும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பாடம் சொல்லி தர தொடங்கினார். மறுபுறம் இவரும் 10 பந்துகளில் 25 ரன்கள் என்று வேகமெடுக்க தொடங்கி, அர்ஷ்தீப் சிங் பந்தில் அவுட்டானார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 16.3 ஓவர்கள் முடியில் 150 ரன்கள் என்ற நிலையை தொட்டு, 6 வது விக்கெட்டை இழந்தது. 






அதே ஓவரில் அர்ஷ்தீப் சிங் அதிரடியாக விளையாடிய நிதிஸ் ரெட்டியையும் 64 ரன்களில் அவுட் செய்தார். அடுத்து வந்த கேப்டன் கம்மின்ஸ் 3 ரன்களிலும், புவனேஷ்வர் குமார் 6 ரன்களிலும் அவுட்டாகினர். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. 


ஷாபாஸ் அகமது 7 பந்துகளில் 14 ரன்களுடனும், உனத்கட் 1 பந்தில் 6 ரன்களுடனும் கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். 


பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்களையும், சாம் கர்ரன் மற்றும் ஹர்சல் படேல் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.