ஐபிஎல் 2024ன் 57வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருக்கின்றன. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்படி இருக்க இந்த ஆட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஹைதரபாத்தில் நேற்று (ஏப்ரல் 7ம் தேதி கனமழை பெய்தது. இந்தநிலையில், ஹைதரபாத்தில் இன்று மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், லக்னோ - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி ரத்து ஆகலாம். 


ஹைதராபாத்தில் இன்றைய வானிலை: 


ஹைதராபாத்தில் இன்றைய நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், இன்றைய வெப்பநிலை 28 முதல் 31 டிகிரி வரை இருந்தது. இதுதவிர, ஈரப்பதம் 60 முதல் 65 சதவீதம் வரை காணப்பட்டதாக கூறப்படுகிறது. 


வானிலை நிலவரப்படி, ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மாலை 4:00 மணிக்கு 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரவு 7 மணிக்கு ஹைதராபாத்தில் 43 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதன்பின், 8 மணிக்கு 51 சதவீதமும், 9 மணிக்கு 51 சதவீதமும், 10 மணிக்கு 38 சதவீதமும், 11 மணிக்கு 32 சதவீதமும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை அறிக்கையை பார்க்கும்போது லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் மோதும் போட்டி ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. 


இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் எப்படி? 


பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் புள்ளிகள் பட்டியலில் தலா 12 புள்ளிகளை பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், லக்னோ அணி 12 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. நடப்பு சீசனில் இரு அணிகளும் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி தலா 6  என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. இவ்வாறான நிலையில் இன்று வெற்றி பெறும் அணி புள்ளிகள் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முன்னேறும். இதன் காரணமாக இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் வெற்றிக்காக களமிறங்கும். 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையிலான இன்றிரவு ஆட்டம் கைவிடப்பட்டால், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பகிர்ந்து கொள்ளும். இதையடுத்து, இரு அணிகளும் 13 புள்ளிகளை பெறும். இந்தச் சூழ்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024 பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற, ஹைதராபாத் மற்றும் லக்னோ இரண்டுமே மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்.


இன்று மழை பெய்யவில்லை என்றால், ஹைதராபாத்தில் அதிக ரன்கள் அடிக்கும் போட்டியாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கலாம். ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த நான்கு ஐபிஎல் போட்டிகளில் மூன்று முறை 200 ரன்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று, ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.065 உடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இதேபோல், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அவர்கள் 11 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றுள்ளது, 12 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.371 உடன் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.