ஐபில் இன்னும் 10 தினங்களில் தொடங்கவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆமாம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஹோம் கிரவுண்ட் என்றால் அது பெங்களூரு மாநகரில் அமைந்துள்ள சின்னச்சாமி மைதானம்தான். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதற்கட்ட அட்டவணையில் பெங்களூரு அணிக்கு இரண்டு போட்டிகள் பெங்களூரு மைதானத்தில் நடத்த அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில், பெங்களூரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் குடங்களுடன் தண்ணீருக்காக பெங்களூரு மாநகர் முழுவதும் வலம் வருவதைப் பார்க்க முடிகின்றது. கோடை காலம் இன்னும் முழுமையாக தொடங்காத நிலையில் பெங்களூரு நகருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது. இப்படியான நிலையில் ஐபிஎல் போட்டியை சின்னச்சாமி மைதானத்தில் நடத்தினால் மைதானத்தினை பாராமரிக்க மட்டுமே தினம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதுவே போட்டி நடக்கும் தினம் என்றால், ரசிகர்களின் பயன்பாட்டிற்கு கூடுதலாக லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதால், இதனைக் கருத்தில் கொண்டு, பெங்களூரில் போட்டியை நடத்த வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், பெங்களூரு அணிக்கு இந்த ஆண்டு விசாகப்பட்டினம் அல்லது கொச்சி மைதானம் தற்போது வெளியிடப்பட்டுள்ள அட்டவணை காலத்திற்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு விசாகப்பட்டினம் மைதானம் கொடுக்கப்பட்டுள்ளதால், பெங்களூரு அணிக்கு கொச்சி மைதானத்தில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது பெங்களூரு அணி ரசிகர்களுக்கு சற்றே அதிர்ச்சிகரமான செய்தியாக இருந்தாலும், நிலைமையை கருத்தில் கொண்டு ரசிகர்கள் இந்த முடிவை ஏற்கத்தொடங்கிவிட்டனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 17-வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் விளையாட இருப்பது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கான முக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருப்பது தான். அதேபோல், சி.எஸ்.கே கேப்டன் தோனிக்கும், ஆர்.சி.பி வீரர் விராட் கோலிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதனால் தான் முதல் போட்டியையே எந்த அணி வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி, மஹிபால் லோம்ரோர், கர்ண் ஷர்மா, மனோஜ் பந்தேஜ், மயங்க் டாகர், விஜய்குமார் வைஷாக், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, ராஜத் பட்டிதார், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வில் ஜேக்ஸ், ராஜன் குமார், கேமரூன் கிரீன், அல்ஜாரி ஜோசப், யாஷ் தயாள், டாம் கரன், லோக்கி ஃபெர்குசன், ஸ்வப்னில் சிங், சவுரவ் சவுகான்.