ஐபிஎல் 2024ன் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்தது. இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த 3 ஆண்டுகளாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக்கு இதுதான் கடைசி ஐபிஎல் போட்டி என்று கூறப்படுகிறது. 


முன்னதாக, ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பே தினேஷ் கார்த்திக் இது தனது கேரியரின் கடைசி சீசன் என்று அறிவித்திருந்தார். அதேபோல், ஐபிஎல் 2024 தொடங்கியபோது சென்னை அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்கியபோது, அன்றைய போட்டியிலும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இதுதான் கடைசி போட்டி என்றும் அறிவித்திருந்தார். இதையடுத்து, நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக் தனது விக்கெட் கீப்பிங் கையுறைகளை பார்வையாளர்களை நோக்கி நன்றி தெரிவித்தார். இதன்மூலம், தினேஷ் கார்த்திக்கின் உடல் மொழி மற்றும் நடத்தை அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடியதை தெளிவாக குறிப்பிட்டது. 


தினேஷ் கார்த்திக் ஐபிஎல் வாழ்க்கை: 


தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 257 போட்டிகளில் விளையாடி 26.32 சராசரி மற்றும் 135.36 ஸ்ட்ரைக் ரேட்டில் 4,842 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 22 அரைசதங்களும் அடங்கும். ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோராகும். இந்திய அணிக்காக தனது முதல் டி20 போட்டியை விளையாடிய ஒரு சில இந்திய வீரர்களில் தினேஷ் கார்த்திக் ஒருவராவார். மேலும், கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 17 சீசன்களில் விளையாடியுள்ள வீரர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவரே. 






டெல்லியில் தொடங்கி பெங்களூருவில் முடிந்த ஐபிஎல் பயணம்: 


கடந்த 2008ம் ஆண்டு தினேஷ் கார்த்திக் டெல்லி டேர்டெலிஸ்ஸுடன் (தற்போதைய டெல்லி கேப்பிடல்ஸ்) தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார். அதன்பின் 2011ம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த தினேஷ் கார்த்திக், 2012 மற்றும் 2013ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தார். அப்போது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 2013ம் ஆண்டு கோப்பையை வென்றது. தொடர்ந்து, 2014ம் ஆண்டு டெல்லி அணியில் மீண்டும் இணைந்த அவர், 2015ம் ஆண்டு பெங்களூரு அணியில் இடம்பிடித்தார். 


அதன்பிறகு, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் குஜராத் லயன்ஸ் அணியில் விளையாடிய கார்த்திக், 2018 ம் ஆண்டு முதல் 2021 வரை கொல்கத்தா அணிக்காக களமிறங்கி கேப்டனாகவும் செயல்பட்டார். இவரது தலைமையில் கொல்கத்தா அணி ஒருமுறௌ பிளே ஆஃப் வரை சென்றது. இதன் தொடர்ச்சியாக, 2022ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இடம்பிடித்த இவர், இன்றுவரை அந்த அணிக்காக விளையாடி வருகிறார். தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 6 அணிகளுக்காக விளையாடி இருந்தாலும், ஒருமுறை மட்டுமே பட்டம் வென்ற அணியில் இடம்பிடித்திருந்தார். 


டெல்லி கேப்பிடல்ஸ் - (2008 - 2010, 2014)
பஞ்சாப் கிங்ஸ் - (2011)
மும்பை இந்தியன்ஸ் - (2012-2013)
குஜராத் லயன்ஸ் - (2016-2017)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -(2018-2021)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - (2025, 2022-2024)






ஐபிஎல் வரலாற்றில் 2வது வெற்றிகரமான விக்கெட் கீப்பர்: 


தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் இருந்து விடைபெறும்போது, பல பெரிய சாதனைகள் தன் பெயரில் வைத்துள்ளார். 38 வயதான தினேஷ் கார்த்திக் ஐபிஎல்லில் இரண்டாவது வெற்றிகரமான விக்கெட் கீப்பராக தனது கேரியரை முடித்துகொண்டார். ஐபிஎல்லில் தினேஷ் கார்த்தில் விக்கெட் கீப்பராக 137 கேட்சுகள் மற்றும் 31 ஸ்டம்பிங்களுடன் மொத்தம் 174 டிஸ்மிஸ்கள் செய்துள்ளார். அவரை விட எம்.எஸ்.தோனி 190 டிஸ்மிஸ்களை செய்து முதலிடத்தில் உள்ளார். 


ஐபிஎல் மூலம் பல கோடிகளை சம்பாதித்த தினேஷ் கார்த்திக்: 


கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல்லில் டெல்லி அணிக்காக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், இதுவரை மொத்தமாக 6 அணிகளில் விளையாடி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் தனது பயணத்தை முடித்துகொண்டார். தினேஷ் கார்த்திக் தனது ஐபிஎல் வாழ்க்கையில் மொத்தமாக ரூ. 86.92 கோடி சம்பாதித்துள்ளார்.