IPL 2024: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெரும் கவனத்தை ஈர்த்து, ஏலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இளம் வீரர்களின் விவரங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.


தாக்கத்தை ஏற்படுத்திய இளம் வீரர்கள்:


நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல நட்சத்திர வீரர்கள் வழக்கம்போல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேநேரம், பல இளம் வீரர்களும் பெரும் பங்களிப்பு தந்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியின் வெற்றிக்கு உதவியதை காட்டிலும், இக்கட்டான சூழலில் இளம் வீரர்களின் பங்களிப்பால் அணிகள் முக்கியமான போட்டிகளில் வெற்றி பெற முடிந்தது பலருக்கு ஆச்சரியம் அளித்தது.


அந்த வகையில் நடப்பு தொடரில் கவனம் ஈர்த்த சில இளம் வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில், இந்த விரர்களின் விலை எகிறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


பில் சால்ட்:


போட்டிகள் - 12 | ரன்கள் - 435 | ஸ்ட்ரைக் ரேட் - 182.00 | அரைசதங்கள்- 4


ஜேசன் ராய் காயம் காரணமாக கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய நிலையில், அவருக்கான மாற்று வீரராக ஏலத்தில் விலைபோகாத பில் சால்ட் அணியில் இணைந்தார். சுனில் நரைனுடன் இணைந்து கொல்கத்தா அணிக்காக அவர் அட்டகாசமான ஓபனிங்கை தந்தார். 12 போட்டிகளில் விளையாடி 435 ரன்கள் சேர்த்ததில் 296 ரன்கள் பவர்பிளேயில் சேர்த்துள்ளார். 


அதுவும் 185.00 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியுள்ளார். மிடில் ஓவர்களில் கூட 175.94 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்தார். சால்ட் இந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக அதிக ரன் சேர்ட்த்ஹ இரண்டாவது வீரராவார். 


மயங்க் யாதவ்


போட்டிகள் -  4 | விக்கெட்டுகள் - 7 | பந்துகள்/விக்கெட் 10.4 | எகானமி - 6.98


மயங்க் யாதவ் இந்த சீசனில் நான்கு ஆட்டங்களில் மட்டுமே விளையாடினாலும், எதிர்காலத்தில் இந்திய அணிக்கு நிச்சயம் விளையாடுவார் என்ற நம்பிக்கையை தந்துள்ளார். அநாயசமாக 147 முதல் 150 கிமீ வேகத்தில் பந்துவீசினார். அதிகபட்சமாக மணிக்கு 155.8 கிமீ வேகத்தைத் தொட்டார். 21 வயதான மயங்க் தனது முதல் இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். அதன் பிறகு காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகினார்.


டிரிஸ்டன் ஸ்டப்ஸ்


போட்டிகள் - 14 | ரன்கள் - 378 | ஸ்ட்ரைக் ரேட் - 190.90 | அரைசதங்கள் - 3


மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இரண்டு சீசன்களில் நான்கு போட்டிகளில் விளையாடிய ஸ்டப்ஸ், நடப்பு தொடரில் டெல்லி அணிக்காக களம் கண்டார்.


அதிரடியான பேட்டிங் மூலம், நடப்பு தொடரில் டெல்லி அணிக்காக அதிக ரன் சேர்த்த இரண்டாவது வீரரானார். 190.90 ஸ்ட்ரைக் ரேட்டில் அவரது சராசரி 54.00 ஆக இருந்தது. மைதானத்தின் அனைத்து மூலைகளிலும் ரன்களை சேர்க்க வல்லவராக திகழ்ந்தார். 


ஹர்ஷித் ராணா


போட்டிகள் - 13 | விக்கெட்டுகள் - 19 | பந்துகள்/விக்கெட் 13.3 | எகானமி - 9.08


கடந்த இரண்டு சீசன்களில் களமிறங்கி இருந்தாலும், நடப்பு தொடரில் தான் ஹர்ஷித் ராணா தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் சிறப்பாக பந்துவீசி, அணியின் தேவைக்கேற்ப விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.


19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள 22 வயதான ராணா, கொல்கத்தா அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.


ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்


போட்டிகள் - 9 | ரன்கள் - 330 | ஸ்ட்ரைக் ரேட் - 234.04 | அரைசதங்கள் - 4


நடப்பு தொடரில், யாருப்பா இந்த பையன்? என ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்த வீரர் மெக்குர்க். 22 வயதான இவர் லுங்கி நிகிடிக்கு மாற்றாக டெல்லி அணியில் இணைந்தார். இந்த தொடரில் 141 பந்துகளை எதிர்கொண்டு,  234.04 என்ற அபாரமான ஸ்டிரைக் ரேட்டில் 330 ரன்களை குவித்தார்.


டெல்லி அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில்  மூன்றாவது இடத்தில் உள்ளார். இரண்டு முறை 15 பந்துகளில் அரைசதம் விளாசினார்.


ஷஷாங்க் சிங்


போட்டிகள் - 14 | ரன்கள் - 354 | ஸ்ட்ரைக் ரேட் - 164.65 | அரை சதங்கள் - 2


ஒரு குழப்பமான சூழலில் பஞ்சாப் அணியில் இணைந்தாலும், தாங்கள் தவறு செய்துவிடவில்லை என்ற என்ற எண்ணத்தை அணியின் உரிமையாளர்களுக்கு ஷஷாங்க் சிங் வழங்கினார். 14 போட்டிகளிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கி, 164.65 ஸ்ட்ரைக் ரேட்டுடன்  354 ரன்களை குவித்தார். கொல்கத்தா அணிக்கு எதிராக 28 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து, ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய சேஸிங்கை பூர்த்தி செய்தார்.


அபிஷேக் சர்மா


போட்டிகள் - 16 | ரன்கள் - 484 | ஸ்ட்ரைக் ரேட் - 204.21 | அரைசதங்கள் - 3


ஐபிஎல் தொடரில் 2022ம் ஆண்டில் 400+ ரன்களை குவித்து இருந்தாலும், நடப்பு தொடரில் அபிஷேக் சர்மா மிகவும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்துள்ளார். 16 போட்டிகளில் விளையாடி, 188.96 ஸ்ட்ரைக் ரேட்டில் 484 ரன்களை குவித்தார்.


பந்துவீச்சிலும் அபாரமான செயல்பட்டை வெளிப்படுத்தியதோடு, ராஜஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் 2 விக்கெட்டுகளை சாய்த்து அதராபாத் வெற்றிக்கு வித்திட்டார். 


அபிஷேக் போரல்:


போட்டிகள் - 14 | ரன்கள் - 327 | ஸ்ட்ரைக் ரேட் - 159.51 | அரைசதங்கள் - 2


அபிஷேக் போரல் டெல்லியின் முதல் போட்டியில் இம்பேக்ட் பிளேயராக வந்து,  பத்து பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். அதன் பிறகு ஓப்பனராக களம் கண்ட அவர்,  தனது கடைசி மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதங்களை விளாசினார்.


12 இன்னிங்ஸ்களில் 327 ரன்கள் எடுத்ததோடு, டெல்லி அணிக்காக அதிக ரன் சேர்த்தவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.


நிதிஷ் குமார் ரெட்டி:


போட்டிகள் - 13 | ரன்கள் - 303 | ஸ்ட்ரைக் ரேட் - 142.92 | அரைசதங்கள் - 2 | விக்கெட்டுகள் - 3


21 வயதான நிதீஷ் குமார் ரெட்டி சிறந்த ஆல்ரவுண்ட் வீரராக செயல்பட்டார். பஞ்சாபிற்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார்.  மொத்தத்தில் ரெட்டி 11 இன்னிங்ஸில் 303 ரன்களை சேர்த்தார். பந்துவீச்சு மற்று பவுலிங்கிலும் அணிக்காக சிறப்பான பங்களிப்பை வழங்குகிறார்.