லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், மீண்டும் தனது வேகமான பந்துவீச்சால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். நேற்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக மயங்க் யாதவ் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட்களை அள்ளினார். 


இதனால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, தனது இரண்டாவது போட்டியிலும் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார் மயங்க் யாதவ். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஐபிஎல் போட்டியில் அறிமுகமான மயங்க் யாதவ், 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 






21 வயதான மயங்க் யாதவ் நேற்றைய போட்டியிலும் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி எதிரணி வீரர்களை திணறடித்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் கேமரூன் க்ரீன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு எதிராக மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் பந்துவீசினார். 


இதன்மூலம், நடப்பு ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக பந்துவீசிய வீரர் என்ற தனது முந்தைய சாதனையை தானே முறியடித்துகொண்டார் மயங்க் யாதவ். கடந்த சனிக்கிழமை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் யாதவ், 155.8 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். 






ஐபிஎல் வரலாற்றில் அதிவேக பந்துவீச்சாளர்கள் பட்டியலில் லக்னோ வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் இணைந்துள்ளார். நேற்றைய போட்டியில் 156.7 கிமீ வேகத்தில் பந்துவீசி ஐபிஎல்லில் அதிவேகமாக பந்துவீசியவர்கள் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறினார். ஐபிஎல்லில் அதிவேக பந்து வீசிய சாதனை ஆஸ்திரேலிய வீரர் ஷான் டெய்ட் பெயரில் உள்ளது. ஷான் டெய்ட் கடந்த 2011ம் ஆண்டு மணிக்கு 157.7 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினார். லாக்கி பெர்குசன் மணிக்கு 157.3 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இரண்டாவது இடத்தில் உள்ளார். உம்ரான் மாலிக் கடந்த 2022ம் ஆண்டு மணிக்கு 157 கிமீ வேகத்தில் பந்து வீசி மூன்றாவது இடத்தில் உள்ளார்.


மற்றொரு சாதனையையும் நிகழ்த்திய மயங்க் யாதவ்: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மயங்க் யாதவ், மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். முதல் இரண்டு ஐபிஎல் போட்டிகளில் மூன்று விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நுழைந்துள்ளார். இந்த சாதனையை செய்த ஆறாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்தார். இவருக்கு முன் லசித் மலிங்கா, அமித் சுங், மயங்க்  மார்கண்டே, கூப்பர் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற பந்து வீச்சாளர்கள் பட்டியலில் உள்ளனர். 


பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு மயங்க் யாதவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதன்பிறகு பேசிய அவர், “நிஜமாகவே நன்றாக இருக்கிறது. களமிறங்கிய இரண்டு போட்டிகளிலும் இரண்டு ஆட்டநாயகன் விருதுகள், இரண்டு போட்டிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றதில் அதிக மகிழ்ச்ச். இந்திய நாட்டுக்காக விளையாடுவதே எனது நோக்கம். இதுதான் ஆரம்பம் என்று நினைக்கிறேன். கேமரூன் கிரீனின் விக்கெட்டை நான் மிகவும் ரசித்தேன். வேகப்பந்து வீச்சுக்கு உணவு, தூக்கம், பயிற்சி என பல விஷயங்கள் முக்கியம். எனது பயிற்சிக்காக உணவு மற்றும் ஐஸ் குளியல் எடுத்துகொள்வேன்” என்றார்.