17வது ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ அணியும் மோதிகொண்டது. இந்த போட்டி பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


182 ரன்கள் இலக்கு


முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீசுவதாக கூறியது. இதனால் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டி காக் 51 ரன்களும் இறுதி நேரத்தில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 21 பந்தில் ஒரு பவுண்டரி 5 சிக்ஸர் விளாசி 40 ரன்கள் குவித்திருந்தார். 


இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி இந்த போட்டில் வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறிவிடலாம் என்ற மனநிலையில் இலக்கைத் துரத்த ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரில் இருந்து பவுண்டரிக் கணக்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு போட்டியின் 4வது ஓவர் வரை சிறப்பாகவே அமைந்தது. 4வது ஓவர் முடிவில் 36 ரன்களை எடுத்த பெங்களூரு, 5வதுஓவரின் இரண்டாவது பந்தில் முதல் விக்கெட்டினை அதிர்ச்சியுடன் இழந்தது. விராட் கோலி தனது விக்கெட்டினை தமிழ்நாடு வீரர் மணிமாறன் சித்தார்த் பந்தில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 


மிரட்டிய மயங்க் யாதவ்


அடுத்த ஓவரில் டூ பிளெசிஸ் ரன் அவுட் ஆக, அதே ஓவரில் மேக்ஸ்வெல் தனது விக்கெட்டினை டக் அவுட் முறையில் மயாங் யாதவ் ஓவரில் வெளியேறினார். 8வது ஓவரில் கேமரூன் க்ரீன் தனது விக்கெட்டினை 9 ரன்னில் இருந்தபோது மயாங்க் யாதவ் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதனால் பெங்களூரு அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 


அதன் பின்னர் இணைந்த அனுஜ் ராவத் மற்றும் ரஜித் படிதார் கூட்டணி நிதானமாக விளையாடி வர, லக்னோ அணி சார்பில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 13வது ஓவரினை வீச, அதில் அனுஜ் ராவத் தனது விக்கெட்டினை இழக்க, பெங்களூரு அணிக்கு நெருக்கடி அதிகமானது. 


அதன் பின்னர் மயாங்க் யாதவ் பந்தில் படிதார் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, அதன் பின்னர் கைகோர்த்த மகிபால் லம்ரோர் மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்தனர். இதில் மகிபால் லம்ரோருக்கு அதிக ஸ்ட்ரைக் கிடைக்க அவர் சிக்ஸ்ர்கள் விளாச ஆரம்பித்தார். 


வென்ற லக்னோ


ஆனால் தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்டினை நவீன் உல்-ஹக் பந்தில் இழந்து வெளியேற, பெங்களூரு அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக லம்ரோர் மட்டும் இருந்தார். இறுதியில் அவரும் தனது விக்கெட்டினை 18வது ஓவரில் இழக்க போட்டி முழுக்க முழுக்க லக்னோ அணியின் வசம் வந்தது. 


இறுதியில் பெங்களூரு அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் மயங்க் யாதவ் 4 ஓவர்கள் பந்து வீசி 14 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த வெற்றியால் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி 9வது இடத்தில் நீடிக்கின்றது.