ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொடரிலும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். இதுவரை ஒரு முறைகூட கோப்பையை கைப்பற்றாத ஆர்.சி.பி. அணி முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த தொடரில் மிக மிக மோசமாக ஆடி வருகிறது.


மோசமாக பந்துவீசும் முகமது சிராஜ்:


இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூர் அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. பெங்களூர் அணியின் மோசமான தோல்விக்கு காரணமாக கருதப்படுவது அந்த அணியின் மிக மிக மட்டமான பந்துவீச்சே காரணம் என்று அனைவரும் தெரிவிக்கின்றனர்.


நேற்று நடந்த போட்டியில் பெங்களூர் அணி நிர்ணயித்த 197 ரன்கள் இலக்கை மும்பை அணி வெறும் 15.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இதன்மூலமே மும்பை அணியின் பந்துவீச்சு எந்தளவு மோசமாக இருக்கிறது? என்பதை கீழே விரிவாக காணலாம். பெங்களூர் அணியின் பந்துவீச்சுக்கு தலைமை தாங்குபவராக கருதப்படும் முகமது சிராஜின் பந்துவீச்சு மிக மிக கவலைக்குரிய வகையில் உள்ளது.


ரன்களை வாரி வழங்கும் சிராஜ்:


நேற்றைய போட்டியில் மட்டும் அவர் 3 ஓவர்கள் வீசி 37 ரன்களை வாரி வழங்கினார். இந்தாண்டு டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், முகமது சிராஜ் இப்படி மோசமாக பந்துவீசி வருவது ஆர்.சி.பி. மட்டுமின்றி இந்திய கிரிக்கெட்டிற்கும் மிகுந்த பின்னடைவாக உள்ளது. ஆர்.சி.பி.யில் இடம்பெற்றுள்ள மற்ற இந்திய பந்துவீச்சாளர்களான ஆகாஷ் தீப், விஜயகுமார் வைஷாக் ஆகியோர் இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளர்கள் கிடையாது. ஆனால், முகமது சிராஜ் இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர் ஆவார்.


இந்திய அணியின் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் பும்ராவுடன் சேர்ந்து ஆட்டத்தை தொடங்கும் பந்துவீச்சாளராக கருதப்படும் முகமது சிராஜ் இந்த ஐ.பி.எல். தொடர் முழுக்க சொதப்பி வருகிறார். அவர் இந்த தொடரில் மட்டும் இதுவரை வெறும் 6 போட்டிகளில் ஆடி 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார். ஆனால், இந்த 6 போட்டிகளில் 229 ரன்களை வாரி வழங்கியுள்ளார். ஒரு ஓவருக்கு 11 ரன்களை வாரி வழங்குகிறார்.


கம்பேக் தருவாரா?


கடந்த சீசனில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ் 14 போட்டிகளில் 50 ஓவர்களை வீசி 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் ஐ.பி.எல். வரலாற்றில் 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் மட்டும்தான் சிறப்பாக பந்துவீசியுள்ளார். கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசி வரும் முகமது சிராஜ் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மண்ணில் நடைபெற உள்ள போட்டிகளில் முக்கிய வீரராக உள்ளார். ஒரு அணியாக களமிறங்கும்போது அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும். ஒருவர் சொதப்பினாலும் அது அணியின் வெற்றியை பாதிக்கும்.


உலகக்கோப்பை டி20 போட்டிக்கு இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் முகமது சிராஜ் இவ்வாறு மோசமாக பந்துவீசி வருவது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இதனால், அவர் மீண்டும் தனது பந்துவீச்சில் கம்பேக் தர வேண்டியது அவசியம் ஆகும். அவர் தொடர்ந்து இதுபோன்று மோசமாகவே பந்துவீசினால் இந்திய அணியில் அவரது இடம் காலியாகிவிடும் என்று கிரிக்கெட் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அடுத்து வரும் ஐ.பி.எல். போட்டிகளில் முகமது சிராஜ் மிரட்டலான ஃபார்முக்கு திரும்புவாரா? என பொறுத்திருந்து பார்ப்போம்.