Jadeja CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தளபதி என்ற பட்டம், ஆல்-ரவுண்டர் ஜடேஜாவிற்கு வழங்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் டிவீட் செய்துள்ளது.


மீண்டும் ஹீரோ ஆன ஜடேஜா..!


ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூலம், சென்னை அணியின் வெற்றிக்கு ஜடேஜா முக்கிய பங்காற்றி மீண்டும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருதை பெற்றபோது, வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேவிடம் உரையாற்றினார். அப்போது, தனக்கான ஒரு பட்டத்தை பெறுவதற்கான எதிர்பார்ப்பையும், ஆசையையும் வெளிப்படுத்தினார். சென்னை அணியை பொறுத்தவரையில் முன்னாள் கேப்டன் தோனி ”தல” எனவும், முன்னாள் நட்சத்திர வீரரான ரெய்னா ”சின்ன தல” எனவும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்றனர். 






”தளபதி” ஜடேஜா


தொடர்ந்து ஹர்ஷா போக்லே வெளியிட்ட டிவிட்டர் பதிவில், போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் கூட ஒட்டுமொத்த ரசிகர்களையும் காண்பது,  வேறு எந்த மைதானத்திலும் நடக்குமா என்று எனக்கு தெரியவில்லை. இங்கு விழாவை தொகுத்து வழங்குவதை நான் விரும்புகிறேன். எனவே, சென்னை அண் நிர்வாகமே ஜடேஜாவிற்கு கிரிக்கெட் தளபதி என்ற பட்டத்தை உறுதி செய்விர்களா?” என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்த ஜடேஜா மிகவும் நன்றி என குறிப்பிட்டு இருந்தார்.






இதையடுத்து சென்னை அணி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “கிரிக்கெட் தளபதி என்பதை உறுதிசெய்கிறோம்” என குறிப்பிட்டு இருக்கிறது. இதனால், சென்னை அணி ரசிகர்கள் ஜடேஜாவை தளபதி என குறிப்பிட்டு இணையத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


சென்னை அணிக்காக ரவீந்திர ஜடேஜா 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் 231 போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 776 ரன்களையும், 156 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 62 ரன்களை விளாசியதோடு, ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.  இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ், கொச்சி டஸ்கர்ஸ், சென்னை மற்றும் புனே ஆகிய அணிகளுக்காக அவர் ஐபிஎல் தொடரில் களமிறங்கியுள்ளார்.