CSK Vs RCB, IPL Playoff: ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி, எந்த வரம்பில் வெற்றி பெற வேண்டும் என்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் தொடர் பிளே-ஆஃப் சுற்று:
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான பிளே-ஆஃப் சுற்று நெருங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டு லீக் போட்டிகளின் முடிவுகள், எந்தெந்த அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதில் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளன. முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் டெல்லியை அணியை வீழ்த்தி, பெங்களூர் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 13 போட்டிகளில் விளையாடி6 வெற்றிகள் மற்றும் +0.387 என்ற ரன் ரேட்டுடன், புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியது. இதனால், பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வது யார் என்பதில், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
பிளே-ஆஃப் சுற்று சூழல்:
9 வெற்றிகளுடன் கொல்கத்தா அணி நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 16 புள்ளிகள் மற்றும் +0.349 என்ற ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி, மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி விடும். ஐதராபாத் அணியோ 12 போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் +0.406 ரன் ரேட்டுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளில் ஒன்றில் வென்றாலே ஐதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு எளிதில் தகுதி பெற்றுவிடும். இந்த சூழலில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு தான், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. லக்னோ, டெல்லி மற்றும் குஜராத் அணிகளும், பிளே-ஆஃப் ரேஸில் இருந்தாலும், அவர்களின் ரன் ரேட் மிக மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை - பெங்களூர் இடையே நேரடி மோதல்:
வரும் 18ம் தேதி நடைபெற உள்ள போட்டியில், சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி, நடப்பு தொடரில் இந்த இரு அணிகளும் மோதும் கடைசி போட்டியாகும். இதில் வெற்றி பெறும் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும், தோல்வியுறும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பதே சூழல். சென்னை அணி தற்போது, 13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அவர்களது ரன் ரேட் +0.528 ஆக உள்ளது. எனவே பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாலே போதும், பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால், பெங்களூர் அணி தகுதி பெறுவது என்பது சில வரம்புகளுடன் வெற்றி பெறுவதுடன், மற்ற சில போட்டிகளின் முடிவுகளையும் சார்ந்தே இருக்கும்.
பெங்களூர் அணி தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் என்ன?
ஐதராபாத் அணி ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறுவதோடு, லக்னோ அணி அதிகபட்சம் ஒரு போட்டியில் மட்டும் வெல்ல வேண்டும். அப்படி நடந்தால் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் இடையேயான போட்டி ஒரு எலிமினேட்டராக உருவெடுக்கும். அதில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தால், குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்த வேண்டும். அல்லது சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து இலக்கை நிர்ணயித்தால் அதனை 18.1 ஓவர்களுக்குள் பெங்களூர் அணி சேஸ் செய்ய வேண்டும். உதாரணமாக சென்னை அணி 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும், அதனை 11 பந்துகள் மீதம் வைத்தே பெங்களூர் அணி சேஸ் செய்ய வேண்டும். அப்போது தான் பெங்களூர் அணியால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.