ஐ.பி.எல். தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடர் அறிமுகப்படுத்திய பிறகு இந்தியாவில் பல இளைஞர்களின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் புதிய ஏறுமுகம் உண்டாகியுள்ளது. ஐ.பி.எல். தொடர் மூலமாக ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, ருதுராஜ் கெய்க்வாட்,  சுப்மன் கில், ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர், இஷான் கிஷன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் என இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்களின் பட்டியல் மிகப்பெரியது.


உரிய அங்கீகாரம் கிட்டுகிறதா?


ஐ.பி.எல். தொடர்களை பொறுத்தவரையில் அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் கொண்ட அணியாக சென்னை, மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் உள்ளது. தோனி, ரோகித் மற்றும் விராட் கோலி ஆகிய மூன்று பேரே இதற்கு பிரதான காரணம் ஆகும். இந்த அணிகளுக்கு பிறகு கொல்கத்தா, ஹைதரபாத்  மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.


ஆனால், டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகளுக்கு பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் கிடையாது. குஜராத், லக்னோ போன்ற அணிகளுக்கும் இதே நிலைமைதான். மிக குறைந்த அளவிலான ரசிகர்கள் கொண்ட அணிகளில் மிக அசாத்தியமான திறமையை காட்டும் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது மிகுந்த வேதனையாக உள்ளது.


பஞ்சாபின் தங்கங்கள்:


ஐ.பி.எல். தொடர் தொடங்கியது முதல் ஆடி வரும் அணிகளில் ஒன்று பஞ்சாப். இந்த அணி ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றியதில்லை. இந்த அணிக்கு என்று நட்சத்திர அந்தஸ்து உள்ள வீரர்கள் யாரும் இல்லாததால் பெரியளவில் இந்த அணிக்கு ரசிகர்கள் பட்டாளம் கிடையாது. ஆனாலும், சாம் கரண், பார்ஸ்டோவ், ஷிகர் தவான், லிவிங்ஸ்டன் என திறமையான வீரர்களை கொண்ட அணி பஞ்சாப்.


இந்த ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி 8 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து புதிய வரலாறை படைத்தது. அதற்கு ஜானி பார்ஸ்டோவின் சதம் மட்டுமின்றி பிரப் சிம்ரன் மற்றும் ஷஷாங்க் சிங்கின் அதிரடி முக்கிய காரணம் ஆகும். பிரப் சிம்ரன் 20 பந்துகளில் விளாசிய 50 ரன்களும், ஷஷாங்க் சிங் 28 பந்துகளில் விளாசிய 68 ரன்களும் முக்கிய காரணம். இவர்களின் சிக்ஸர் அடிக்கும் திறனும் அபாரமாக உள்ளது.


இந்த தொடர் தொடங்கியது முதலே பஞ்சாப் அணிக்காக பிரப் சிம்ரன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா ஆகிய மூன்று பேரும் அசாத்தியமாக ஆடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மூன்று பேரையும் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் கொண்டாடவில்லை என்பதே உண்மை ஆகும். அதுமட்டுமின்றி டி20 உலகக்கோப்பைக்காக நாம் பரிந்துரைக்கும் வீரர்களின் பட்டியலில் இவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை என்பதும் கூட உண்மை ஆகும்.


வேறு அணிகளில் ஆடியிருந்தால்?


ஒரு வேளை இவர்கள் மூன்று பேரும் சென்னை அணியிலோ, மும்பை அணியிலோ அல்லது பெங்களூர் அணிக்காகவோ தங்களது இந்த பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியிருந்தால் அவர்கள் கொண்டாடப்பட்டிருக்கும் விதம் நிச்சயம் வேறு விதமாக இருந்திருக்கும். குறிப்பாக, ஏலத்தில் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரர் என்று அடையாளம் காட்டப்பட்ட ஷஷாங்க் சிங்தான் பஞ்சாப் அணியின் ஃபினிஷராக அசத்தி வருகிறார்.


அவரது பேட்டிங் திறமையை கண்ட ஒரு சிலர் மட்டுமே டி20 உலகக்கோப்பைக்கான அணியில் அவர் பெயர் இடம் பெற வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். ஒரு வேளை பஞ்சாப் அணியில் இந்திய அணிக்காக ஆடும் நட்சத்திர வீரர்கள் யாராவது ஆடியிருந்தால், இவர்கள் போன்ற திறமையான வீரர்களும் பெரியளவில் கொண்டாடப்பட்டு இருப்பார்களோ? என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.