ஐ.பி.எல் 2024:


சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. 


அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி தான் ஐ.பி.எல் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நடைபெறும் என்ற அறிவிப்பு முன்னதாகவே வெளியாகி இருந்தது. 


ரசிகர்கள் குமுறல்:


இந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கிய நிலையில் ஒரு சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டது. அதேபோல், அதிகாரப்பூர்வ டிக்கெட் பார்ட்னரின் இணையதளத்திலும் டிக்கெட்டுகள் எடுக்க முடியாமல் ரசிகர்கள் திணறினார்கள்.  பின்னர் அதில் ஏற்பட்ட சிரமங்களை ஸ்கீரின் ஷாட் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். 


 






 






 






தொழில்நுட்பச் சிக்கல்:


இச்சூழலில் ஐ.பி.எல் டிக்கெட் பார்ட்னரான  Paytm Insider ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அன்புள்ள ரசிகர்களே, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான TATA IPL 2024 தொடக்கப் போட்டிக்கு கிடைத்த அமோக வரவேற்பிற்கு நன்றி. துரதிர்ஷ்டவசமாக, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும்.




இந்த அனுபவத்திற்காக நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்க விரும்புகிறோம். நம்பகமான மற்றும் தடையற்ற அனுபவத்தை வழங்குவதே எங்களுக்கு முதன்மையானது, அதை உறுதிசெய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். நாங்கள் மிக விரைவில் செயல்படுவோம். மேலும் புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்" என்று அதிகாரப்பூர்வ டிக்கெட் பங்குதாரர் PayTM இன்சைடர் கூறியுள்ளது.